நடிகர் க்றிஸ்டியன் பேல், 'தோர் லவ் அண்ட் தண்டர்' படத்தின் வில்லனாக நடிக்கவுள்ளதை நடிகை டெஸ்ஸா தாம்ஸன் உறுதி செய்துள்ளார்.
2008-ம் ஆண்டு 'அயர்ன் மேன்' திரைப்படத்துடன் மார்வல் சூப்பர் ஹீரோக்களின் மார்வல் சினிமா உலகம் என்று சொல்லப்படும் திரைப்பட வரிசை ஆரம்பமானது. தொடர்ந்து 'ஹல்க்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்களை வெளியிட்டு அந்தக் கதாபாத்திரங்கள் வாழும் உலகம் எனத் தனியாகச் சித்தரிக்கப்பட்டது.
மூன்று கட்டங்களாக மொத்தம் 23 படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. இதில் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படமே இந்த வரிசையில் கடைசி. இந்தப் படம் உலகத் திரை வரலாற்றில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் படைத்தது.
தற்போது மார்வல் சினிமா உலகின் நான்காவது கட்டத்தில் வெளியாகவுள்ள படங்களின் வேலைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதில் அடுத்த வருடம் 'தோர்' படத்தின் நான்காவது பாகமான 'தோர்: லவ் அண்ட் தண்டர்' திரைப்படம் வெளியாகவுள்ளது. 'தோர் ரக்னராக்' படத்தின் இயக்குநர் டைகா வைடிடி இந்தப் படத்தை இயக்குகிறார். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மீண்டும் தோர் கதாபாத்திரத்திலும், டெஸ்ஸா தாம்ஸன் வால்கைரீ கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளனர். தோர் காதலியாக முதல் இரண்டு தோர் படங்களில் தோன்றிய நடாலி போர்ட்மேனும் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் க்றிஸ்டியன் பேல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதை நடிகை டெஸ்ஸா தாம்ஸன் ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார். ஆனால் அவரது கதாபாத்திரத்தைப் பற்றி மேற்கொண்டு எந்த விஷயத்தையும் தாம்ஸன் பகிரவில்லை. இந்த வருடக் கடைசியில்தான் 'தோர் 4' படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. எனவே அதுவரை பேல் நடிக்கவுள்ள கதாபாத்திரம் பற்றி மார்வல் தரப்பு ரகசியம் காக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
'மெஷினிஸ்ட்', 'அமெரிக்கன் சைக்கோ' உள்ளிட்ட படங்களின் மூலம் க்றிஸ்டியன் பேல் பிரபலமாகியிருந்தாலும் சர்வதேச அளவில் அவருக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்தது க்றிஸ்டோஃபர் நோலன் இயக்கிய 'பேட்மேன்' திரை வரிசையே. 'பேட்மென் பிகின்ஸ்', 'தி டார்க் நைட்', 'டார்க் நைட் ரைசஸ்' என மூன்று படங்களும் மாபெரும் வெற்றி பெற்று க்றிஸ்டியன் பேலின் பெயரையும் பல இடங்களுக்கு சென்று சேர்த்தன. ஆனால், இதன் பிறகு பேல் பேட்மேன் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. பென் ஆஃப்லெக், தற்போது ராபர்ட் பேட்டின்ஸன் என அந்தக் கதாபாத்திரம் கை மாறிவிட்டது.
மார்வலுக்கு போட்டியாகப் பார்க்கப்படும் டிசி சினிமா உலகிலிருந்து ஒரு பிரபல நடிகர் மார்வல் சினிமா உலகில், அதுவும் வில்லனாக நடிக்கவிருப்பது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.