ஹாலிவுட்

இண்டியானா ஜோன்ஸ் இயக்கத்தை விட்டுக்கொடுத்த ஸ்பீல்பெர்க்

செய்திப்பிரிவு

இண்டியானா ஜோன்ஸ் திரைப்பட வரிசையை இயக்கி வந்த இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், முதல்முறையாக அந்த பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். ஐந்தாவது பாகத்தை வேறொரு இயக்குநர் இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.

ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி, லோகன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் மேன்கோல்டிடம் இண்டியானா ஜோன்ஸ் தயாரிப்பு நிறுவனம் டிஸ்னி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி ஆஸ்கரில் நான்கு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு இரண்டு விருதுகளை வென்றது நினைவுகூரத்தக்கது.

ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க் படத்துடன் இந்த பட வரிசையை ஆரம்பித்த ஸ்பீல்பர்க், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகச் செயல்படவுள்ளார். படத்தை இளைய தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஆசையிலேயே அவர் இயக்குநர் பொறுப்பை விட்டுக்கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இது போலவே 2015ஆம் ஆண்டு ஜுராசிக் வேர்ல் படங்கள் குறித்து ஸ்பீல்பெர்க் முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. மூன்று வருடங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட இண்டியானா ஜோன்ஸ் பல்வேறு காரணங்களால் தாமதிக்கப்பட்டு வருகிறது. ஹாரிசன் ஃபோர்ட் மீண்டும் ஜோன்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

SCROLL FOR NEXT