ஹாலிவுட்

திரை விமர்சனம்: ‘தி இன்விசிபிள் மேன்’

செய்திப்பிரிவு

காதலனால் துன்புறுத்தலுக்கு ஆளாகும் நாயகி செஸிலியா ஒரு கட்டத்தில் அவரை விட்டுத் தப்பிக்கிறார். சில நாட்கள் கழித்து காதலி பிரிந்த துக்கத்தில் செஸிலியாவின் காதலர் ஏட்ரியன் தற்கொலை செய்து கொண்டதாக செஸிலியாவுக்குச் செய்தி கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து வரும் நாட்களில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களின் மூலம் தன் காதலன் இறக்கவில்லை.

விஞ்ஞானியான அவன் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் உத்தியைக் கண்டுபிடித்துவிட்டான் என்று தெரிந்து கொள்கிறார் செஸிலியா. இதை மற்றவர்களிடம் சொல்லிப் புரிய வைக்கும் முயற்சியில் தோற்றுப் போகிறார். இதனால் செஸிலியா அனுபவிக்கும் இன்னல்கள் என்னென்ன? உண்மையில் ஏட்ரியன் என்ன செய்தார்? என்பதே ‘தி இன்விசிபிள் மேன்’ படத்தின் கதை.

மார்வெல் நிறுவனத்தின் பாணியைப் பின்பற்றி படங்களை எடுக்கத் தொடங்கிவிட்டது ஹாலிவுட் உலகம். அதன்படி யுனிவர்சல் நிறுவனம் மான்ஸ்டர்ஸ் யுனிவர்ஸ் என்ற புது உலகைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது. இதன் முதல் படம் 2017 ஆம் ஆண்டு டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான ‘தி மம்மி’. படம் படுதோல்வியடைந்ததால் இம்முயற்சி கைவிடப்பட்டு 3 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ‘தி ஹாலோ மேன்’ படங்களின் மூலம் பரிச்சயமான கதாபாத்திரத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்து சில சுவாரஸ்யச் காட்சிகளை சேர்த்து ஒரு திகில் படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் லீ வானல்.

செஸிலியாவாக எலிசபத் மாஸ். ஒற்றை ஆளாக ஒட்டுமொத்தப் படத்தையும் தோளில் சுமக்கிறார். படம் முழுவதும் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். குறைந்த பட்ஜெட் படம் என்பதை பறைசாற்றும் கண்களை உறுத்தாத கிராபிக்ஸ். ஒரு திகில் படத்துக்குத் தேவையான சிறப்பான ஒளிப்பதிவை வழங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்டீபன் டுஸியோ.

எளிதில் ஊகிக்க முடிந்த திரைக்கதை, ஏற்கெனவே பார்த்த மாதிரியான க்ளிஷேவான திகில் காட்சிகள் என்று படம் சென்றாலும் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அவற்றைச் சமன் செய்கிறது.

படத்தின் பிரதான கதாபாத்திரமான ஏட்ரியன் பற்றி வசனங்களாலேயே சொல்லப்படுவதால் பார்வையாளர்களால் அந்தக் கதாபாத்திரத்தோடு ஒன்ற முடியவில்லை. படத்தின் பல காட்சிகள் 'தி ஹாலோ மேன்' படத்தை நினைவுபடுத்துவது படத்தின் மிகப்பெரிய மைனஸ்.

வீட்டில் இருக்கும் அறைகளின் பாஸ்வேர்டுகள் தெரிந்தும் நாயகி ஏன் முன்பே தப்பிக்கவில்லை, கண்ணுக்குத் தெரியாமல் மறையும் தொழில்நுட்பத்தை நாயகி ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை, சிசிடிவி என்ற ஒரு விஷயமே மருந்துக்கும் பயன்படுத்தவில்லை, இதுபோன்ற பல லாஜிக் ஓட்டைகள் உள்ளன.

எலிசபத் மாஸ் நடிப்புக்காகவும், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டுக்காகவும் ஒருமுறை பார்க்கக்கூடிய படம் இந்த ‘தி இன்விசிபிள் மேன்’.

SCROLL FOR NEXT