ஹாலிவுட்டில் தயாராகி வரும் புதிய படத்தில், ஓஷோவின் தனிப்பட்ட செயலாளரான ம ஆனந்த் ஷீலா கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளார்.
அமேசான் ஸ்டுடியோஸ் நிறுவனம் 'ஷீலா' என்ற பெயரில் இத்திரைப்படத்தை ஹாலிவுட்டில் தயாரிக்கிறது.
பாலிவுட், ஹாலிவுட் என இன்றுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. 2000-ல் மிஸ் வேர்ல்டு ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரியங்கா சோப்ரா, 'தமிழன்' திரைப்படத்தில் விஜய் ஜோடியாக கோலிவுட் சினிமாவில் நடித்தார். கடந்த ஆண்டு 'தி ஸ்கை இஸ் பிங்க்' திரைப்படத்தில் ஆயிஷா சவுத்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தார். இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பாராட்டைப் பெற்றதோடு நல்ல வசூலையும் ஈட்டித் தந்தது.
வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படங்களுக்கக் கிடைத்துவரும் அபரிதமான வரவேற்பை அடுத்து, ம் ஆனந்த் ஷீலா என்ற சர்ச்சைக்குரிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.
இந்தியாவில் தோன்றி அமெரிக்காவில் ஆசிரமம் அமைத்து ரஜனீஷ் என்ற பெயரில் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஓஷோ எனும் தத்துவஞானிக்கு தனிப்பட்ட செயலாளராக ம ஆனந்த் ஷீலா பணியாற்றினார். ஓரிகானின் வாஸ்கோ கவுண்டியில் உள்ள ரஜ்னீஷ்புரம் ஆசிரமத்தை அவர் நிர்வகித்து வந்தார்.
1981-1985 வரை ஓஷோவின் தனிப்பட்ட செயலாளராக இருந்தபோது, 1984 ஆம் ஆண்டு ஓரிகானில் நடந்த ரஜ்னீஷ் பயோடெர்ரர் தாக்குதலின் முதன்மைக் குற்றவாளியாக ம ஆனந்த் ஷீலா அறிவிக்கப்பட்டார். அதன்பின்பு தீக்குளிப்பு, வயர்டேப்பிங், கொலை முயற்சி, மற்றும் வெகுஜன விஷம் ஆகிய குற்றச்சாட்டுகளால் ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்றார். எனினும் ஷீலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது பங்கிற்காக கொலை முயற்சி மற்றும் தாக்குதல் ஆகியவற்றில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அமெரிக்க அரசு ம ஆனந்த் ஷீலாவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 39 மாதங்களுக்குப் பிறகு பரோலில் வெளியே வந்தவர் 'வைல்ட் வைல்ட் கன்ட்ரி' ஆவணப் படம் மூலம் பிரபலமானார்.
நான்கு ஆஸ்கர்களை வென்ற ''ரெய்ன் மேன்'' ஹாலிவுட் படத்தை இயக்கிய பேரி லெவின்சன் கைவண்ணத்தில் 'ஷீலா' திரைப்படம் உருவாகிறது. இப்படத்திற்கான கதை திரைக்கதையை நிக் யால்போரக் எழுதுகிறார்.