ஆஸ்கர் விருது பெற்ற பிறகு ‘பாரசைட்’ படத்தின் டிக்கெட் விற்பனை 234% அதிகரித்துள்ளது.
92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த தென்கொரியத் திரைப்படமான 'பாரசைட்' சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை ஆகிய விருதுகளை வென்றது.
தென்கொரியப் படமொன்று ஆஸ்கர் விருது பெறுவது இதுவே முதல் முறை. மேலும் சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில் மற்ற ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட்டு வென்றுள்ள முதல் அயல் மொழித் திரைப்படமும் 'பாரசைட்'தான்.
'பாரசைட்'டின் வெற்றி கான்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கப் பனை விருதைப் பெற்றதிலிருந்து தொடங்கியது. தொடர்ந்து, அமெரிக்க கதாசிரியர்கள் கில்ட் விருதுகளிலும், பாஃப்தாவிலும் திரைக்கதைக்கான விருதினை வென்றது. திரை நடிகர்கள் கில்ட் விருதுகளிலும் 'பாரசைட்' வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 'பாரசைட்' திரைப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததன் எதிரொலியாக அப்படத்தின் டிக்கெட் விற்பனை 234% மடங்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்கருக்குப் பிறகு அதிக டிக்கெட்டுகள் விற்பனையான படமும் இதுவே.
ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை ‘பாரசைட்’ திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 44 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை ‘பாரசைட்’ வசூலித்துள்ள மொத்தத் தொகை 204 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஆஸ்கர் விருது வென்ற படங்களின் டிக்கெட் விற்பனை அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் 'பாரசைட்' படம் பெற்றிருக்கும் வரவேற்பு இதுவரை எந்தப் படத்துக்கும் கிடைக்காதது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.