ஹாலிவுட்

ஆஸ்கர் 2020: வரலாறு படைத்த பாராசைட்

செய்திப்பிரிவு

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த திரைப்பட விருதைப் பெற்ற முதல் அயல் மொழித் திரைப்படம் என்ற பெருமையை 'பாராசைட்' திரைப்படம் பெற்றுள்ளது.

ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த தென்கொரியத் திரைப்படமான 'பாராசைட்' சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை ஆகிய விருதுகளை வென்றது. சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த திரைப்படம் என இரண்டு பிரிவுகளிலும் 'பாராசைட்' பரிந்துரைக்கப்பட்டு இரண்டிலுமே வென்று ஆச்சரியமளித்தது.

தென்கொரியப் படமொன்று ஆஸ்கர் விருது பெறுவது இதுவே முதல் முறை. மேலும் சிறந்த திரைப்படத்துக்கான பிரிவில் மற்ற ஹாலிவுட் படங்களுடன் போட்டியிட்டு வென்றுள்ள முதல் அயல் மொழித் திரைப்படமும் 'பாராசைட்'தான். 1917 படத்துக்கும் 'பாராசைட்' படத்துக்குமே கடைசிக் கட்டத்தில் கடும் போட்டி நிலவியதாக ஹாலிவுட் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

'பாராசைட்'டின் வெற்றி கான்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதான தங்கப் பனை விருதைப் பெற்றதிலிருந்து தொடங்கியது. தொடர்ந்து, அமெரிக்க கதாசிரியர்கள் கில்ட் விருதுகளிலும், பாஃப்தாவிலும் திரைக்கதைக்கான விருதினை வென்றது. திரை நடிகர்கள் கில்ட் விருதுகளிலும் 'பாராசைட்' வென்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT