92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த இயக்குநர் பிரிவில் பரிந்துரைக்கப்படாத பெண் இயக்குநர்களின் பெயர்களை தனது ஆடையில் தைத்துக் கொண்டு ஆஸ்கர் விருது விழாவுக்கு வருகை தந்துள்ளார் நடிகை நாடலி போர்ட்மேன்.
’ஹஸ்ட்லர்ஸ்’, 'தி ஃபேர்வெல்', 'லிட்டில் வுமன்', 'எ பியூடிஃபுல் டே இன் தி நெய்பர்வுட்', 'குயின் அண்ட் ஸ்லிம்', 'ஹனி பாய்', 'போர்ட்ரெய்ட் ஆஃப் எ லேடி ஆன் ஃபயர்', 'அட்லாண்டிக்ஸ்' ஆகிய திரைப்படங்களின் (பெண்) இயக்குநர்களின் பெயர்களை தனது ஆடையில் தைத்துக் கொண்டு வந்தார் நடிகை நாடலி போர்ட்மென்.
விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் இப்படியான விஷயங்களை நாடலி செய்வது இது முதல் முறை அல்ல. 2018-ஆம் ஆண்டு, சிறந்த இயக்குநருக்கான விருது பரிந்துரை பற்றி அறிவிக்கும் போது, "இதோ இந்த பிரிவில் ஆண் போட்டியாளர்களின் பெயர்கள்" என்று குறிப்பிட்டார்.
இந்த வருடம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியல் அறிவிக்கப்படும்போதே சிறந்த இயக்குநர் பிரிவில் எந்த பெண் இயக்குநரின் பெயரும் இடம் பெறாமல் இருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் இப்படி நடப்பது இது முதல் முறை அல்ல. இந்த 92 வருடங்களில் இந்த பிரிவில் இதுவரை ஐந்தே ஐந்து பெண் இயக்குநர்கள் தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் 'ஹர்ட் லாக்கர்' படத்துக்காக கேத்ரின் பிக்லோ மட்டுமே ஆஸ்கர் வென்றுள்ளார்.
- ஏ.என்.ஐ