தொடங்கப்பட்ட மூன்று மாதங்களில் ‘டிஸ்னி+’ தளத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.9 கோடியை எட்டியுள்ளது.
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களான நெட் ஃபிளிக்ஸ், அமேஸான் ப்ரைமுக்கு போட்டியாக டிஸ்னி நிறுவனமும் டிஸ்னி+ என்ற பெயரில் களத்தில் குதித்தது. இதில் டிஸ்னி, பிக்ஸார், மார்வெல், நேஷனல் ஜியோகிராஃபிக், ஸ்டார் வார்ஸ் ஆகியவற்றின் படங்கள், வெப் சீரிஸ், கார்ட்டூன்கள் அனைத்தும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிஸ்னி+ தளம் பயன்பாட்டுக்கு வந்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பா, இந்தியா, லத்தீன் நாடுகளில் டிஸ்னி + தளத்தை விரிவுபடுத்த டிஸ்னி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஆரம்பித்த மூன்றே மாதங்களில் ‘டிஸ்னி+’ தளத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2.9 கோடியை எட்டியுள்ளது. குறைந்த நாட்களில் இது ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டுக்குள் ‘டிஸ்னி +’ சந்தாதாரர்களின் எண்ணிக்கையை 6 கோடி ரூபாய் முதல் 9 கோடி ரூபாயாக அதிகரிக்க டிஸ்னி திட்டமிட்டுள்ளது.
மார்வெல் நிறுவனத்தில் ‘அவெஞ்சர்ஸ்’ படங்களின் தொடர்ச்சியான, ‘வாண்டாவிஷன்’, ‘ஃபால்கன் அண்ட் தி விண்ட்டர் சோல்ஜர்’, ‘லோகி’ உள்ளிட்ட தொடர்களின் முன்னோட்டத்தை சில தினங்களுக்கு டிஸ்னி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ‘டிஸ்னி +’ வரும் மார்ச் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.