ஹாலிவுட்

நான் கேட்ட சம்பளத்தை தரவில்லை- மார்வெல் நிறுவனத்தை சாடும் வில்லன் நடிகர்

செய்திப்பிரிவு

தான் கேட்ட சம்பளத்தை தர மார்வெல் நிறுவனம் மறுத்துவிட்டதாக நடிகர் ஹ்யூகோ வீவிங் குற்றம்சாட்டியுள்ளர்.

'மேட்ரிக்ஸ்' படங்களில் வில்லனாக நடித்தவர் ஹ்யூகோ வீவிங். ஏற்கெனவே பல படங்களில் நடித்திருந்தாலும் மேட்ரிக்ஸ் படத்தில் இவர் ஏற்று நடித்த ஏஜெண்ட் ஸ்மித் கதாபாத்திரம் அவரை பிரபலமாக்கியது. அதன் பிறகு ’லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’, ’ஹாபிட்’, டிரான்ஸ்ஃபார்மர்ஸ் உள்ளிட்ட பட படங்களில் நடித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு வெளியான மார்வெல் நிறுவனத்தின் ’கேப்டன் அமெரிக்கா- தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்’ திரைப்படத்தில் ’ரெட் ஸ்கல்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஹ்யூகோ வீவிங். அதன்பிறகு ரெட் ஸ்கல் கதாபாத்திரம் வேறு எந்த மார்வெல் படங்களிலும் தோன்றவில்லை.

இந்த நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ மற்றும் ’அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ’ரெட் ஸ்கல்’ கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்த கதாபாத்திரத்தில் ஹ்யூகோ வீவிங் நடிக்கவில்லை.

இதற்கான காரணம் குறித்து ஒரு தனியார் இதழுக்கு அளித்த பேட்டியில் ஹ்யூகோ கூறியுள்ளதாவது:

’ரெட் ஸ்கல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போது மொத்தம் மூன்று மார்வெல் படங்களில் நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். இனி ’கேப்டன் அமெரிக்கா’ படங்களில் ’ரெட் ஸ்கல்’ கதாபாத்திரம் இடம்பெறாது என்று நினைத்திருந்தேன். ஆனால் அவெஞ்சர்ஸில் அது ஒரு வில்லன் கதாபாத்திரமாக இடம்பெறலாம் என்று நினைத்தேன்.

அதன்பிறகு ஒப்பந்தத்தில் அவர்கள் பல்வேறு மாற்றங்களை செய்தார்கள். கேப்டன் அமெரிக்காவில் நான் வாங்கியதை விட குறைந்த சம்பளத்தை இரண்டு படங்களுக்கு தருவதாக கூறினார்கள். ஆனால் ஒப்பந்தத்தின் போது ஒவ்வொரு முறையும் சம்பளம் அதிகமாகும் என்றே கூறியிருந்தார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது என்பதை தெரிந்துகொண்டேன். ’ரெட் ஸ்கல்’ கதாபாத்திரத்தில் நடிக்க நான் பெரிதாக விரும்பவில்லை. ஆனால் நான் அதில் நடித்திருக்க வேண்டும்”

இவ்வாறு ஹ்யூகோ வீவிங் கூறினார்.

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள மேட்ரிக்ஸ் 4ஆம் பாகத்திலிருந்தும் சில தினங்களுக்கு முன்பு ஹ்யூகோ நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT