இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் அடுத்த படத்தில் லியோர்னாடோ டிகாப்ரியோ மற்றும் ராபர்ட் டி நிரோ இருவரும் இணைந்து நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது
’ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் அவார்ட்ஸ்’ விருது நிகழ்ச்சி அண்மையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் 'ஐரிஷ்மேன்' திரைப்படத்தில் நடித்திருந்த ராபர்ட் டி நிரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரிடம் லியோர்னாடோ டிகாப்ரியோ வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய டிகாப்ரியோ, மார்ட்டின் ஸ்கோர்செஸி அடுத்தததாக இயக்கவுள்ள ’கில்லர்ஸ் ஆஃப் தி மூன்’ என்ற திரைப்படத்தில் தானும், ராபர்ட் டி நிரோவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
ஸ்கோர்செஸியின் இயக்கத்தில் டிகாப்ரியோவும், ராபர்ட் டி நிரோவும் தனித்தனியாக ஏற்கெனவே பல படங்களில் நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை.
ஸ்கோர்செஸி இயக்கிய 'டாக்ஸி டிரைவர்', 'ரேஜிங் புல்', 'குட்ஃபெல்லாஸ்' உள்ளிட்ட படங்களில் ராபர்ட் டி நிரோவும் 'கேங்ஸ் ஆஃப் நியூயார்க்', 'வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்', 'ஷட்டர் ஐலேண்ட்' உள்ளிட்ட படங்களில் டிகாப்ரியோவும் நடித்துள்ளனர்.
இப்படம் 1920களில் அமெரிக்காவின் ஓசே என்ற பகுதியில் நடைபெற்ற படுகொலைகளைப் பற்றிய 'கில்லர்ஸ் ஆஃப் தி மூன்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படவுள்ளது.