ஹாலிவுட்

இனி ‘ஃபாக்ஸ்’ கிடையாது; 20th செஞ்சுரி மட்டும்தான்: டிஸ்னியின் அதிரடி

செய்திப்பிரிவு

20th செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் பெயரிலிருந்து 'ஃபாக்ஸ்' என்ற வார்த்தையை நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், 20th செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்துக்கு உட்பட்ட எஃப் எக்ஸ், ஃபாக்ஸ் நெட்வொர்க்ஸ் இண்டெர்நேஷனல், நேஷன்ல் ஜியோகிராபிக் (73% பங்குகள்), ஸ்டார் இந்தியா, ஆகிய நிறுவனங்களை 71 பில்லியன் டாலர்களுக்கு டிஸ்னி நிறுவனம் வாங்கியது.

'அவதார்', 'டைட்டானிக்' உள்ளிட்ட மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்த ஹாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான 20th செஞ்சுரி ஃபாக்ஸை டிஸ்னி வாங்கியது உலகம் முழுவதும் பேசுபொருளானது.

இந்தநிலையில் 20th செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தின் பெயரிலிருந்து ’ஃபாக்ஸ்’ என்ற வார்த்தையை நீக்க டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான காரணம் எதையும் அந்நிறுவனம் கூறவில்லை. தங்களது நிறுவனத்தின் பெயரில் ஃபாக்ஸ் என்ற வார்த்தை இருப்பதை டிஸ்னி விரும்பவில்லை என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதன்படி 20th செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் இனி 20தth செஞ்சுரி ஸ்டுடியோஸ் என்ற பெயரிலும், ஃபாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ் இனிவரும் காலங்களில் சர்ச்லைட் பிக்சர்ஸ் என்றும் பெயர் மாற்றம் செய்யப்படும். இந்த நிறுவனங்களில் ட்விட்டர் தளத்திலும் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சர்ச்லைட் பிக்சர்ஸ் தயாரிக்கும் முதல் படமாக ‘டௌன்ஹில்’ என்ற திரைப்படமும், ‘ஃபாக்ஸ்’ என்ற பெயர் இல்லாமல் 20th செஞ்சுரி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் முதல் படமாக ‘கால் ஆஃப் தி வைல்ட்’ என்ற படமும் வெளியாகவுள்ளன.

SCROLL FOR NEXT