’ப்ளாக் விடோ’ படத்தில் தான் நடிப்பது குறித்து இன்னமும் மர்மமாகவே பதிலளித்து வருகிறார் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர்.
மார்வல் சினிமா உலகின் முதல் பத்து ஆண்டுகள் மூன்று கட்டங்களாகப் பிரிந்து, ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்துடன் நிறைவடைந்தது. இந்தப் படத்தில் பிரபலமான, முக்கியக் கதாபாத்திரங்கள் பலர் இறப்பது போல கதையமைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ’அயர்ன் மேன்’ கதாபாத்திரத்தின் மரணம் பல ரசிகர்களைத் திரையரங்கில் கண் கலங்க வைத்தது.
தற்போது மார்வல் சினிமா உலகம் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இதில் முதல் திரைப்படமாக மே மாதம் ’பிளாக் விடோ’ வெளியாகிறது. நடாஷா ரோமனாஃப் என்ற கதாபாத்திரமே ’பிளாக் விடோ’ என்ற சூப்பர் ஹீரோவாக அறியப்படுகிறது. இந்தக் கதாபாத்திரம் ‘எண்ட்கேம்’ படத்தில் இறந்து விட்டாலும் இந்தக் கதாபாத்திரத்தின் புதிரான கடந்த காலத்தை இந்தப் படம் விவரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தில் நடக்கும் கதை என்பதால் இந்தப் படத்தில் ‘அயர்ன் மேன்’ கதாபாத்திரம் கவுரவத் தோற்றமாக வரலாம் என்று செய்திகள் வந்தன. ‘அயர்ன் மேன் 2’ படத்தில்தான் நடாஷா கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த கவுரவத் தோற்றம் குறித்து நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டபோது, "நான் எனது கதாபாத்திரத்தை முடித்துவிட்டேன். அதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் எதுவும் நடக்கும். அவர்கள் (மார்வல்) இது (கவுரவ வேடம்) குறித்து என்னிடம் சொன்னால் நன்றாக இருக்கும். அவர்களால் இப்போது எதுவும் செய்ய முடியும். ஏன் இது மொத்தமுமே ஒரு பொய்யான பேட்டியாக இருக்கக்கூடும்" என்று பதிலளித்துள்ளார்.
டவுனியின் இந்த தெளிவற்ற பதிலால் அவர் ‘பிளாக் விடோ’ படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது இன்னமும் தெளிவாகாத நிலையிலேயே உள்ளது. மே 1, 2020-ல் ‘பிளாக் விடோ’ வெளியாகிறது.