92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, மேடைத் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல ஏபிசி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. ஏபிசி நிறுவனத் தலைவர் கேரி பர்க் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
"இப்போது அகாடமியுடன் இணைந்து உறுதி செய்கிறேன். இந்த முறை நிகழ்ச்சிக்கான வழக்கமான மேடைத் தொகுப்பாளர் இருக்க மாட்டார்" என்று கூறியுள்ள பர்க், கடந்த வருடம் நடந்தது போலவே இந்த வருடமும் பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டார்.
கடந்த வருடம் நகைச்சுவை நடிகர் கெவின் ஹார்ட், விழாவின் தொகுப்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிகழ்ச்சிக்கு சில நாட்கள் முன்பு ட்விட்டரில் ஒரே பாலின விருப்பமுள்ளவர்கள் பற்றிய இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கெவின் ஹார்ட் மன்னிப்பு கேட்டு ஆஸ்கர் நிகழ்ச்சியை வழங்கலாம் அல்லது விலகலாம் என்று அகாடமி அவரிடம் சொல்ல, அவர் விலகியிருக்க முடிவெடுத்தார். இதுபோன்ற சர்ச்சைகளைத் தவிர்க்கவே இந்த வருடமும் தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விழா நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், கடந்த வருடம், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு ஹாலிவுட் பிரபலம் மேடையில் தோன்றி விருது வழங்கியதில் தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடியது குறிப்பிடத்தக்கது.
இந்த வருட ஆஸ்கர் விருது விழா பிப்ரவரி 9-ம் தேதி அன்று ஒளிபரப்பாகிறது.