'ஜோக்கர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் டோட் பிலிப்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
டிசி காமிக்ஸ் வில்லனான ஜோக்கர் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘ஜோக்கர்’. ஹாக்கின் ஃபீனிக்ஸ் நடித்த இப்படத்தை டோட் பிலிப்ஸ் இயக்கியிருந்தார். படம் வெளியாகி உலகம் முழுக்க நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜோக்கராக நடித்த ஹாக்கின் ஃபீனிக்ஸுக்கு பத்திரிகைகளிடமிருந்தும், விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இந்தப் படத்தின் அடுத்த பாகம் வெளியாகுமா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு இயக்குநர் டோட் பிலிப்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டோட் பிலிப்ஸ் இது குறித்துப் பேசும்போது, “உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு படம் இதுபோன்ற கேள்விகளை எதிர்கொள்வது சாதாரணம்தான். ஆனால் நானும் ஹாக்கின் ஃபீனிக்ஸும் இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். முதல் பாகத்தைப் போல ரசிகர்களிடம் அதிர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே அந்தப் படத்தை என்னால் இயக்க இயலும்’’ என்றார்.