'தி ஐரிஷ்மேன்' தனது கடைசிப் படமாக இருக்கக்கூடும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார் பிரபல ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸி.
சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான 'தி ஐரிஷ்மேன்' விமர்சகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. 77 வயதான இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸிக்குப் பலர் புகழாரம் சூட்டினர். ஆஸ்கரில் மற்ற படங்களுக்கு 'ஐரிஷ்மேன்' கடும் போட்டியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் மார்வல் சூப்பர் ஹீரோ படங்களைக் கடுமையாகச் சாடியிருந்தார் ஸ்கோர்செஸி. அவை தீம் பார்க் அனுபவங்களே ஒழிய சினிமாக்கள் அல்ல என்று கூறியிருந்தார். மேலும், நியூயார்க் டைம்ஸிலும் தனது கருத்துகளைக் கட்டுரையாக எழுதியிருந்தார். சமீபத்தில் கார்டியன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அந்தக் கட்டுரையில் சொன்ன விஷயங்களை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
"மாற்று சினிமாவுக்கான இடம் திரையரங்குகளில் இல்லை. என்னால் இன்னும் எவ்வளவு படங்கள் எடுக்க முடியும் என்று தெரியவில்லை. ஒருவேளை இதுவே என் கடைசிப் படமாக இருக்கலாம். இப்போது நாம் இருக்கும் சூழ்நிலை என்னவென்றால் திரையரங்குகளில் சமீபத்திய சூப்பர் ஹீரோ படங்கள் மட்டுமே திரையிடப்படுகின்றன.
12 திரைகள் இருந்தால் 11 திரைகளில் சூப்பர் ஹீரோ படம் ஓடுகிறது. நீங்கள் சூப்பர் ஹீரோ படத்தைப் பார்த்து ரசிக்கலாம். பரவாயில்லை. ஆனால் அதற்கு 11 திரைகளும் வேண்டுமா? 'லேடி பேர்ட்', 'சாவனியர்' போன்ற (மாற்று) சினிமாக்களுக்கு இதனால் திரையரங்குகள் கிடைப்பது கடினமாகிறது. அவை பெரிய வணிகரீதியான படங்களாக இல்லாமல் போகலாம். ஆனால் எளிமையான, நேர்மையான படங்கள் பெரிய ரசிகர் கூட்டத்தைச் சென்றடைந்திருக்கிறது" என்று பேசியுள்ளார்.