'நோ டைம் டு டை' படத்தில் டேனியல் க்ரெய்க் 
ஹாலிவுட்

ஏன் மீண்டும் 'ஜேம்ஸ் பாண்ட்'? - டேனியல் க்ரெய்க் விளக்கம்

செய்திப்பிரிவு

'ஜேம்ஸ் பாண்ட்' பட வரிசையைப் பொருத்த வரை தனக்கு முடிக்கப்படாத ஒரு வேலை பாக்கி இருப்பதால் தான் கடைசியாக ஒரு முறை மீண்டும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடிவெடுத்ததாகக் கூறியுள்ளார் நடிகர் டேனியல் க்ரெய்க்.

2006-ஆம் ஆண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க ஆரம்பித்த டேனியல் க்ரெய்க், இதுவரை நான்கு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்துள்ளார். 2015ல் வெளியான 'ஸ்பெக்டரே' இவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், இனி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் என் கை நரம்புகளை அறுத்துக்கொள்வேன் என்று பேசியிருந்தார் டேனியல் க்ரெய்க்.

ஆனாலும் கடைசி முறையாக தனது ஐந்தாவது ஜேம்ஸ் பாண்ட் படத்தில் இயக்குநர் கேரி ஃபுகுநாகா இயக்கத்தில் டேனியல் க்ரெய்க் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு 'நோ டைம் டு டை' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படம் பற்றி பேசியுள்ள க்ரெய், "'ஸ்பெக்டர்' படத்தின் முடிவு கச்சிதமாக இருந்தாலும் கதை என்று பார்க்கும்போது அது சரியான முழுமையைக் கொடுக்கவில்லை என்று எனக்குத் தோன்றியது. அப்படி நடந்திருந்தால் உலகம் எப்பவும் போல இயங்கியிருக்கும். நானும் நன்றாக இருந்திருப்பேன். ஆனால் ஏதோ ஒரு விஷயம் முடிக்கப்படாமல் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.

'ஸ்பெக்டர்' படத்தோடு நான் நிறுத்தியிருந்தால் இன்னும் ஒரு படம் நடித்திருக்கலாமே என்று எனக்கு தோன்றிக்கொண்டே இருந்திருக்கும். இதை எப்படிக் கொண்டு போக வேண்டும் என்று என் மனதுக்குள்ளேயே ரகசியமாக யோசித்து வைத்திருந்தேன். அது ஸ்பெக்டரில் இல்லை. இந்தப் படம் அப்படி இருக்கும் எனத் தெரிகிறது" என்று கூறியுள்ளார்

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள 'நோ டைம் டு டை' படத்தில் வில்லனாக ஆஸ்கர் விருது வென்ற ரமி மாலேக் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

SCROLL FOR NEXT