ஹாலிவுட்

’அவெஞ்சர்ஸ்’ நாயகர்களுடன் சுற்றுலா: ’கேப்டன் அமெரிக்கா’ நடிகர் திட்டம்

செய்திப்பிரிவு

’அவெஞ்சர்ஸ்’ படத்தில் நடித்தவர்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்லத் திட்டமிட்டு வருவதாக நடிகர் க்றிஸ் ஈவன்ஸ் தெரிவித்துள்ளார்.

மார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் அனைத்துமே அடுத்தடுத்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலைக் குவித்து வருகின்றன. இதில் குறிப்பாக அனைத்து சூப்பர் ஹீரோக்களும் சேர்ந்து நடித்த ’அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம், சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற ’அவதார்’ படத்தின் சாதனையை முறியடித்து முதலிடத்தைப் பெற்றது.

இதைக் கொண்டாடும் வகையில் ’அவெஞ்சர்ஸ்’ படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறோம் என கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் க்றிஸ் ஈவன்ஸ் கூறியுள்ளார்.

"நாங்கள் ஒரு சிறிய வெற்றி நடை போட உரியவர்களே. இது அற்புதமான விஷயம் மட்டுமல்ல. எப்படி ஸ்டார் வார்ஸ் படங்கள் என்னைப் பாதித்ததோ அதே போல (அவெஞ்சர்ஸ் மூலம்) கலாச்சாரத்தில் ஒன்றாகும் அளவுக்குப் பிரபலமாகியிருக்கிறோம். ஆனால் என் மனதில் என்றும் தங்குவது, நான் எத்தகைய நபர்களுடன் சேர்ந்து நடித்தேன் என்பதுதான். உண்மையில் அந்தக் கூட்டத்தில் ஒருவர் கூட எதிர்மறையானவர் கிடையாது" என்று க்றிஸ் ஈவன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மார்வல் சூப்பர் ஹீரோ படங்களைத் தொடர்ந்து க்றிஸ் ஈவன்ஸ் நடித்துள்ள ’நைவ்ஸ் அவுட்’ என்ற திரைப்படம் விமர்சகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. நவம்பர் 29-ம் தேதி அன்று இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT