ஹாலிவுட்

என் குழந்தைகளிடமிருந்துதான் வலிமையை கற்றுக்கொண்டேன்: ஏஞ்சலினா ஜூலி நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

நியூயார்க்

என் குழந்தைகளிடமிருந்துதான் வலிமையை நான் கற்றுக்கொண்டேன் என்று பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி கூறியுள்ளார்.

டூம்ப் ரைடர், Mr & Mrs ஸ்மித், வாண்டட், சால்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி. உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராட் பிட்டின் முன்னாள் மனைவியான இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் மூன்று பேர் ஏஞ்சலினா ஜூலியால் தத்தெடுக்கப்பட்டவர்கள்.

ஏஞ்சலினா ஜூலி நடித்த மெலாஃபிஸண்ட்: மிஸ்ட்ரஸ் ஆஃப் ஈவில் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஏஞ்சலினா, தன் குழந்தைகள் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசினார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ''நீண்ட காலமாக என் குழந்தைகள்தான் எனக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். நம்முடைய சுதந்திரமான, மகிழ்ச்சியான, வாழ்க்கை, வலியாலும், காயங்களாலும் திடீரென ஒருநாள் மறைந்து போகலாம். என்னுடைய அசலான குணம் என் குழந்தைகளுக்குத் தெரியும். அதைக் கண்டுபிடித்து மீட்க அவர்கள்தான் எனக்கு உதவினார்கள்.

அவர்கள் நிறைய கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்துதான் வலிமையை நான் கற்றுக்கொண்டேன். ஒரு பெற்றோராக நாம் அவர்களுடைய இதயத்தில் இருப்பவற்றை ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களும் நமக்கு அதையே செய்வார்கள்” என்று ஏஞ்சலினா ஜூலி பேசினார்.

ஏஞ்சலினா ஜூலி தற்போது மார்வெல் நிறுவனத்தின் தி எடர்னல்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

SCROLL FOR NEXT