நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ’ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் 3’ பட வேலைகளை மீண்டும் தொடங்க வார்னர்ஸ் பிரதர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஹாரிபாட்டர் படங்களின் முன்கதையான ’ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ படங்களின் மூன்றாம் பாகத்தை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்க வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. ஆனால் கடந்த ஆண்டு வெளியான ’ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: க்ரைம்ஸ் ஆஃப் க்ரிண்டல்வால்ட்’ படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் அதன் அடுத்த பாகத்தை எடுப்பதற்கு முன்பாக படத்தின் உருவாக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வதற்காக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது.
தற்போது அந்தப் பேச்சுவார்த்தை நிறைவுபெற்றதால் ’ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்’ மூன்றாம் பாகத்துக்கான வேலைகளைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது. மொத்தம் ஐந்த பாகங்களைக் கொண்ட இந்தப் படவரிசையில் இதுவரை இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன.
ஹாரிபாட்டர் காலத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பான கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படத்தை டேவிட் யேட்ஸ் இயக்குகிறார். ஹாரிபாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே.ரவுலிங் இந்தப் படத்துக்கும் கதை, திரைக்கதை எழுதுகிறார்.
எட்டி ரெட்மேய்ன், ஜானி டெப், ஜூட் லா நடிக்கவுள்ள இந்தப் படம் 2021 ஆம் ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.