லாஸ் ஏஞ்சல்ஸ்,
மார்வெல் படங்கள் சினிமா அல்ல; அவை சாகசங்கள் நிறைந்த ஒரு தீம் பார்க் அனுபவத்தையே தருகின்றன என்று கூறிய புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் கருத்துக்கு ஹாலிவுட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் எம்பயர் பத்திரிகை இயக்குநர் ஸ்கோர்செஸியின் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியுள்ளதாவது:
"நான் மார்வெல் படங்களை முழுமையாகப் பார்க்கவில்லை. ஆனால் முயற்சித்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? நான் அவற்றைப் பற்றி இன்னும் கூட சரியாகச் சொல்ல முடியும். அவை சினிமா அல்ல. நேர்மையாகச் சொல்ல வேண்டுமெனில் மார்வெல் படங்கள், தீம் பார்க்குகளில் நாம் பெறும் சாகச உணர்வைத் தரும்விதமாகத் தயாரிக்கப்படுகின்றன.
இந்த சூழ்நிலையில் பங்கேற்கும் நடிகர்களும் தங்களால் இயன்றதை, சிறப்பாகச் செய்கிறார்கள். ஆனால் அவை எல்லாம் சினிமா என்று சொல்லத் தேவையில்லை. ஒரு மனிதன் தன்னுடைய உணர்ச்சிப்பெருக்கு, உளவியல் அனுபவங்களை மற்றொரு மனிதனுக்குக் கடத்த முயல்கிறான் என்பதைத் தாண்டி அதில் சினிமாவுக்கான தன்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை''.
இவ்வாறு ஸ்கோர்செஸி தெரிவித்துள்ளார்.
பல்வேறு மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் திரைப்படத் தயாரிப்புகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் திரைப்பட இயக்குநர்கள் ஜேம்ஸ் கன் மற்றும் ஜோஸ் வெட்டோன் ஆகியோர் ஸ்கோர்செஸியின் கருத்துகளுக்குப் பதிலளித்தனர்.
"படத்தைப் பார்க்காமலேயே 'லாஸ்ட் டெம்டேஷன் ஆப் கிறிஸ்ட்' திரைப்படத்தை எதிர்த்து மக்கள் மறியல் செய்தபோது நான் கோபமடைந்தேன். அவர் இப்போது எனது படங்களையும் அந்த மக்கள் செய்த அதே வழியில் தீர்ப்பளிப்பதாக வருத்தப்படுகிறேன்" என்று ஜேம்ஸ் கன் ட்விட்டரில் பதிவிட்டார்.
"நான் எப்போதும் ஸ்கோர்செஸியை நேசிப்பேன். சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். மேலும், 'தி ஐரிஷ்மேன்' பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்" என்று 'கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி' இயக்குநர் மேலும் கூறினார்.
'தி அவெஞ்சர்ஸ்' மற்றும் 'அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்' ஆகியவற்றில் பணியாற்றிய வெட்டோன், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் மூத்த திரைப்பட இயக்குநர் கருத்துகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
தனது கருத்துப் பதிவில் வெட்டோன் கூறுகையில், "நான் முதலில் @ஜேம்ஸ் கன் பற்றி நினைக்கிறேன். அவரது இதயம் மற்றும் தைரியம் எவ்வாறு GOTG இல் நிரம்பியுள்ளன. நான் மார்ட்டியை வணங்குகிறேன். மற்றும் அவர் கூறிய கருத்துகளையும் தற்போது நான் காண்கிறேன்.
ஆனால் ...சரி, நான் எப்போதும் கோபமாக இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது" என்று தெரிவித்த வெட்டோன் ஸ்கோர்செஸியின் நேர்காணலுக்கான இணைப்போடு ட்வீட் செய்தார்.
'ஸ்பைடர் மேன்: இன்டூ தி ஸ்பைடர்-வெர்சஸ்' இயக்குநர் பீட்டர் ராம்சே, இதுகுறித்து கூறுகையில், ''ஸ்கோர்செஸி ஒரு கடவுள். ஆனால், மார்வெல் திரைப்படங்கள் வேடிக்கையாகவும் நன்றாகவும் இருக்கின்றன. கூடவே குளிர்ச்சியாகவும் உள்ளன" என்றார்.