மார்வல் ஸ்டுடியோஸின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் கெவின் ஃபைஜி, டிஸ்னி நிறுவனத்துக்காக புதிய ஸ்டார் வார்ஸ் படத்தை உருவாக்கவுள்ளார்.
டிஸ்னி நிறுவனம் 2009-ல் மார்வல் நிறுவனத்தை வாங்கியது. பின் 2012ல் 'ஸ்டார் வார்ஸ்' படங்களைத் தயாரித்து வந்த ஜார்ஜ் லூகாஸின் லூகாஸ் ஃபிலிம் நிறுவனத்தை 4.05 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. டிஸ்னி தலைமையில் மார்வலும், லூகாஸ் ஃபிலிமும் சேர்ந்தே இயங்கி வருகின்றன. 2000-வது ஆண்டிலிருந்து இன்று வரை மார்வல் ஸ்டுடியோஸின் தலைவராகச் செயல்பட்டு வருபவர் கெவின் ஃபைஜி.
லூகாஸ்ஃபிலிம் தலைவர் கேத்லீன் கென்னடியுடன் இணைந்து ஃபைஜி, புதிய 'ஸ்டார் வார்ஸ்' படத்தை உருவாக்க உள்ளார். ஸ்டார் வார்ஸ் பட வரிசையில் ஸ்கைவாக்கர் தொடர்பான கதை வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் தி ரைஸ் ஆஃப் ஸ்கைவாக்கருடன் நிறைவு பெறுகிறது. எனவே இங்கிருந்து புதிய பாதையில் 'ஸ்டார் வார்ஸ்' படக் கதையை எடுத்துச் செல்லும் பொறுப்பு ஃபைஜி கையில்.
ஸ்டார்வார்ஸ் மட்டுமல்ல, 'இண்டியானா ஜோன்ஸ்', 'சில்ட்ரன் ஆஃப் ப்ளட் அண்ட் போன்' உள்ளிட்ட படங்களின் உருவாக்கத்திலும் ஃபைஜி பங்களிப்பார் என்று தெரிகிறது.