வாஷிங்டன்
ஸ்பைடர்மேன் விவகாரத்தின் மார்வெல் நிறுவனத்துக்கும் சோனி நிறுவனத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் டாம் ஹாலண்ட் ‘ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரத்தின் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு சோனி நிறுவனத்துக்கும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை உருவாக்கிய மார்வல் நிறுவனம் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இனி அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஸ்பைடர்மேன் படங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் கேட்கும் மார்வெல் நிறுவனத்தின் கோரிக்கையை சோனி நிறுவனம் ஏற்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் சோனி - மார்வெல் கூட்டு தயாரிப்பு உருவாகும் ஸ்பைடர்மேன் படங்களில் இனி தலையிடுவதில்லை என்று விலகினார்.
இதனால் அடுத்த மார்வெல் படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் இடம்பெறுமா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் டிஸ்னி நிறுவனத்தின் ’டி23’ என்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்பைடர்மேன் நடிகர் டாம் ஹாலண்ட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
’நான் ஸ்பைடர்மேனாக நடிக்க தொடங்கி 5 ஆண்டுகள் ஆகிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. ஆனால் எனக்கு தெரிந்ததெல்லாம் தொடர்ந்து ஸ்பைடர்மேனாக நான் நடிக்கப்போகிறேன் என்பது மட்டும்தான். ஸ்பைடர்மேன் படங்களின் எதிர்காலம் வித்தியாசமாகவும், அதே நேரத்தில் அற்புதமாகவும் இருக்கும். அந்த கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக வடிவமைக்க புதிய வழிகளை கண்டறிவோம்’
இவ்வாறு அவர் கூறினார்.