ஹாலிவுட்

இனி அவெஞ்சர்ஸில் ’ஸ்பைடர்மேன்’ இல்லை?: வலுக்கும் சோனி - மார்வெல் மோதல்

செய்திப்பிரிவு

மார்வல் நிறுவனத்துக்கும் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து மார்வல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் இனி ஸ்பைடர்மேன் படங்களில் தலையிடப்போவதில்லை என விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வப் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு சாம் ரெய்மி இயக்கத்தில் ’ஸ்பைடர்மேன்’ திரைப்படம் வெளியானது. அப்போது முதல் ‘ஸ்பைடர்மேன்’ கதாபாத்திரத்தின் உரிமை அப்படத்தை தயாரித்த சோனி நிறுவனத்திடம் இருந்து வருகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு சோனி நிறுவனத்துக்கும் ஸ்பைடர்மேனை கதாபாத்திரத்தை உருவாக்கிய மார்வல் நிறுவனம் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இனி அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ’கேப்டன் அமெரிக்கா சிவில் வார்’, ’ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்’, ’அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’, ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’, ’ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகிய படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டது. இதில் ’ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்’, ’ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ ஆகிய இரு படங்களும் சோனி தயாரிப்பில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்த படங்களாகும்.

இந்நிலையில் ஸ்பைடர்மேன் படங்கள் மூலம் கிடைக்கும் லாபத்தில் 50 சதவீதம் கேட்கும் மார்வெல் நிறுவனத்தின் கோரிக்கையை சோனி நிறுவனம் ஏற்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் சோனி - மார்வெல் கூட்டு தயாரிப்பு உருவாகும் ஸ்பைடர்மேன் படங்களில் இனி தலையிடுவதில்லை என்று விலகியுள்ளார்.

இதை சோனி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,

'ஸ்பைடர்மேன்’ பற்றி இன்று வரும் பெரும்பாலான செய்திகள் கெவின் ஃபீஜுடைய தலையீடு குறித்த பேச்சுவார்த்தையை தவறாக சித்தரிக்கின்றன. ஆனால் எங்களுடைய அடுத்த ஸ்பைடர்மேன் படத்தின் தயாரிப்பாளராக கெவின் ஃபீஜ் தொடரமாட்டார் என்ற டிஸ்னியின் முடிவை மதிக்கிறோம். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் நான்காம் பகுதியின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் ஸ்பைடர்மேன் குறித்த எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இனிவரும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் படங்களில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் இடம்பெறுமா இல்லையா என்பது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

எனினும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #savespiderman என்ற ஹாஷ்டேகுகள் மூலம் உலக அளவில் இந்த பிரச்சினையை டிரென்ட் செய்துவிட்டனர் ரசிகர்கள்.

அமலாபாலுக்கு எவ்வளவு தைரியம்!: வசுந்தரா பேட்டி - வீடியோ

SCROLL FOR NEXT