புதிய காட்சிகளுடன் ’ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ’ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 23-வது படமாகவும், ’ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்’ படத்தின் இரண்டாவது பாகமாகவும் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் இதுவரை 1.1 பில்லியன் டாலர்களும், அமெரிக்காவில் 375 மில்லியன் டாலர் வசூலையும் குவித்துள்ளது.
கடந்த மே மாதம் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்திற்குப் பிறகு மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சோனி நிறுவனம் தயாரித்த படங்களில் அதிக வசூலைக் குவித்த படமும் இதுவே.
இந்நிலையில் படத்திற்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யப்போவதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் படத்தில் 4 நிமிட புதிய காட்சிகளையும் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 375 மில்லியன் டாலர்களை 400 மில்லியன் டாலர்களாக உயர்த்தவும் சோனி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடாவில் குறிப்பிட்ட திரையரங்குகளில் ’ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்’ புதிய காட்சிகளுடன் மீண்டும் வெளியாகிறது.
இதற்கு முன்பு வெளியான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்திலும் வசூலை அதிகரிக்க வேண்டி சில காட்சிகள் சேர்க்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.