'டாம் அண்ட் ஜெர்ரி' படத்தின் லைவ் ஆக்ஷன் பதிப்பு திரைப்படத்தில் நடிக்க இந்திய நடிகை பல்லவி ஷர்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ஹாலிவுட் அனிமேஷன்கள் பலவும் காலத்துக்கு ஏற்றார் போல புதிய வடிவில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன. டிஸ்னி நிறுவனம் ஜங்கிள் புக், பியூட்டி அண்ட் தி பீஸ்ட், சமீபத்தில் லயன் கிங் என அனிமேஷ படங்களை நடிகர்களை வைத்தும், தத்ரூப அனிமேஷன் உத்தியை கொண்டு மறு ஆக்கம் செய்து வெளியிட்டு, கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதித்தும் வருகிறது.
இந்த ஆட்டத்தில் தற்போது வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. குழந்தைகளுக்கு பிடித்தமான டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்களை வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்கள் தத்ரூப அனிமேஷனிலும், மற்றபடி அதைச் சுற்றி உண்மையான நடிகர்களும் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தில் இந்திய நடிகை பல்லவி ஷர்தா என்பவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ரன்பீருடன் பெஷாராம், ஆயுஷ்மனுடன் ஹவாய்ஸாதா உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
மேலும் இந்தப் படத்தில் க்ளோ கிரேஸ் மார்டேஸ், மைக்கேல் பீனா, காலின் ஜஸ்ட் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 2021 ஏப்ரல் 16 அன்று இந்தத் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.