ஹாலிவுட்

இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலைக் கடந்து லயன் கிங்  சாதனை 

செய்திப்பிரிவு

'லயன் கிங்' திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. 

1994-ஆம் ஆண்டு டிஸ்னி தயாரிப்பில் வெளியான கார்டூன் படம் 'லயன் கிங்'. இது 3டியில் தத்ரூப அனிமேஷனாக மீண்டும் உருவாக்கப்பட்டு ஜூலை 19 அன்று வெளியானது. இந்தியாவில், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியானது. அந்தந்த மொழிகளில் பிரபலமான திரை நட்சத்திரங்கள் படத்தில் குரல் கொடுத்திருந்தனர். இதோடு படத்துக்கான விளம்பரத்துக்கும் டிஸ்னி அதிகமாக செலவழித்தது.

திரையிட்ட நாள் முதலே குழந்தைகள் பட்டாளத்தைக் கவர்ந்த 'லயன் கிங்', திரையிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை செய்ய ஆரம்பித்தது. முதல் வாரத்திலேயேபடம் ரூ. 81 கோடி வசூலைத் தாண்டியது. தற்போது இரண்டாவது வாரத்தில் மேற்கொண்டு ரூ. 32.1 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் படத்தின் மொத்த வசூல் இதுவரை ரூ.114 கோடியைத் தாண்டியுள்ளது. இது அனைத்து மொழி பதிப்புகளையும் சேர்த்த வசூலாகும்.

இதுவரை இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்'. மொத்தம் ரூ.367 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. தற்போது இந்தப் பட்டியலில் 'லயன் கிங்' இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 'அவெர்ஞ்சர்ஸ் எண்ட்கேம்' வசூலை மிஞ்ச முடியாது என்றாலும் 'லயன் கிங்' குறைந்தது இன்னும் ஒன்றிரண்டு வாரங்களுக்குப் தொடர்ந்து வசூலிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச அளவில் 'லயன் கிங்' ஒரு பில்லியன் டாலர் வசூலை நெருங்கிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT