ஜோ வாட்ஸ் - வின் டீசல் 
ஹாலிவுட்

‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்-9’ படப்பிடிப்பில் விபத்து: 30 அடி உயரத்திலிருந்து விழுந்த வின் டீசலின் டூப் காயம்

செய்திப்பிரிவு

‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9 ’ படப் பிடிப்பில் நடிகர் வின் டீசலுக்கு டூப்பாக நடித்த கலைஞர் படப்பிடிப்பின்போது கீழே விழுந்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. 

‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9 ’ படத்தின் படப்பிடிப்பு, இங்கிலாந்தில் இருக்கும் வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் ஒரு பால்கனி பக்கத்தில் தொங்குவது போன்ற காட்சியில், வின் டீசலுக்கு பதிலாக எப்போதும் போல ஸ்டண்ட் கலைஞர் ஜோ வாட்ஸ் நடித்து வந்தார். அப்போது அவரது உடலில் பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிறு திடீரன அறுந்ததில் கிட்டத்தட்ட 30 அடி உயரத்திலிருந்து  தரையில் விழுந்தார் ஜோ வாட்ஸ். 

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விஷயம் கேள்விப்பட்டு அடுத்த சில நொடிகளில் அங்கு வந்த வின் டீசல் தனது டூப்புக்கு ஏற்பட்ட விபத்தைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்து கண்ணீர் விட்டார்.

விபத்தில் சிக்கிய ஸ்டண்ட் கலைஞர் ஜோ வாட்ஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை திருமணம் செய்யப்போகும் டில்லி பாவெல் என்பவரும் ஒரு ஸ்டண்ட் கலைஞர் தான். அவர் இந்த விபத்து பற்றி பேசுகையில், "ஜோவுக்கு தலையில் பலமாக அடிபட்டுள்ளது. அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கோமா நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்போதைக்கு அவர் ஸ்திரமாக உள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என் இதயம் நொறுங்கியுள்ளது. அவர் இதிலிருந்து மீண்டு வர, அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

காவல்துறை நடந்த விபத்து குறித்து விசாரித்து வருகிறது. ஸ்டூடியோவில் புதிதாக கட்டப்பட்ட படப்பிடிப்பு தளத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து காரணமாக இப்போது அந்த தளமும் மூடப்பட்டுவிட்டது, படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT