ஹாலிவுட்

இன்ஸைட் அவுட் - உணர்வுப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்!

காயத்ரி நரசிம்ஹன்

அனிமேஷன் திரைப்படங்கள் குழந்தைகளுக்கானது மட்டும்தான் என்ற பரவலான கருத்து மாற காரணமாக இருந்தவை பிக்ஸார் (Pixar) நிறுவனம் தயாரித்த படங்கள்.

இயக்குனர் ஷங்கர், எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டும் முன்னரே, கார் முதல் விமானங்கள் வரை அனைத்துக்கும் உணர்ச்சிகள் புகட்டி திரையில் பேச வைத்தன பிக்ஸார் திரைப்படங்கள். அந்த வரிசையில், உணர்ச்சிகளுக்கு உணர்ச்சிகள் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கருவில் உருவாகியுள்ள படம்தான் 'இன்ஸைட் அவுட்' (Inside Out).

தன் மண்டைக்குள் கேட்கும் உணர்வுபூர்வ சின்னச் சின்ன குரல்களின் வழிநடத்தலில் இயங்கும் 11 வயதுடைய ரைலி (Riley) என்ற சிறுமியை பற்றிய கதை 'இன்ஸைட் அவுட்'. 'டாய் ஸ்டோரி', 'அப்' போன்ற பிக்ஸாரின் உணர்வுபூர்வமான ஹிட் திரைப்படங்களை எழுதி இயக்கிய பீட் டாக்டர் தான் இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

மகிழ்ச்சி, சோகம், கோபம், வெறுப்பு, பயம் என்னும் ஐந்து உணர்வுகளின் உருவகங்கள்தான் கதையின் முக்கிய பாத்திரங்கள்.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா விவரித்த தலைமைச் செயலகத்தை தங்கள் கன்ட்ரோல் ரூமாகக் கொண்ட இவ்வுணர்வுகள், ரைலியின் நினைவுகளைக் கொண்டு அவளை இயக்குகின்றன. அமைதியான மிட்வெஸ்ட் பகுதியிலிருந்து, பரபரப்பான ஸான் பிரான்சிஸ்கோவிற்கு இடம் பெயரும் ரைலி, பலவித மாற்றத்திற்கு ஆளாகிறாள்.

அந்த நேரத்தில் ஜாயும் (மகிழ்ச்சி) ஸாட்னெஸ்ஸும் (சோகம்) தொலைந்து போய்விட, மற்ற மூன்று உணர்வுகளும் ரைலியின் மனதை சமநிலைப்படுத்த முயல்கின்றன. ஜாயும், ஸாட்னெஸ்ஸும் ரைலியின் கனவுலகில் இருக்கும் கதாபாத்திரங்களின் உதவியைக் கொண்டு மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு எவ்வாறு திரும்புகின்றன என்பதுதான் கதை.

கடந்த ஜூன் 19 அன்று அமெரிக்காவில் வெளியாகிய 'இன்ஸைட் அவுட்', ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' படத்தின் முதல் 3 நாள் வசூல் சாதனையை முறியடித்துள்லது. 'இன்ஸைட் அவுட்' ஜூன் 26-ம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

</p>

SCROLL FOR NEXT