கடந்த வாரம் 'நடிகர் ஜாக்கிசான் இறந்துவிட்டார்' என்ற வதந்தியை இணையதளம் ஒன்று வெளியிட்டதோடு, அதை செய்தித் தொலைகாட்சி வாசிப்பாளர் ஒருவர் கூறுவது போல ஃபோட்டோஷாப் படம் ஒன்றையும் வெளியிட்டது. தொடர்ந்து இந்தச் செய்தி இணையம் முழுவதும் பரவியது.
இது தொடர்பாக, நடிகர் ஜாக்கிசான் அறிக்கை ஒன்றை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "நான் விமானத்திலிருந்து இறங்கியதும் எனக்கு இந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. கவலைப்படவேண்டாம். நான் நலமுடன் உயிரோடுதான் இருக்கிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.
ஜாக்கிசான் தற்போது 68-வது கான்ஸ் சர்வதே திரைப்பட விழாவில் பங்கேற்று வருகிறார். அவரும், கான்ஸ் மார்கெட் என்ற அமைப்பும் சேர்ந்து, கான்ஸில், புதிய சீன திரைப்படக் கலைஞர்களுக்கான பிரத்யேக மன்றத்தில் பங்கேற்று வெற்றி பெறும் சீன இயக்குநர்களுக்கு 1,65,000 டாலர்கள் பரிசினை அறிவித்துள்ளனர்.
இந்தப் பரிசுத் தொகை, ஜாக்கிசான் உருவாக்கியுள்ள 'சான் திட்டம்: இளம் இயக்குநர்கள் முன்னேற்ற நிதி' என்ற திட்டத்தின் மூலம் வருகிறது. பரிசுத் தொகை, வெற்றி பெற்ற இயக்குநரின் புதிய திரைப்படத்தில் முதலீடு செய்வதற்காகவே வழங்கப்படுகிறது. இந்த வருடம் இந்தப் போட்டியில் 8 இளம் இயக்குநர்கள் பங்கேற்கின்றனர்.