தொலைக்காட்சி பேட்டி ஒன்றிலிருந்து பாதியில் எழுந்து சென்றார் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர். அவரது கடந்த காலத்தைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டதால் அதிருப்தியில் அவர் வெளியேறினார்.
இந்த வாரம் வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ்' படத்தின் இரண்டாம் பாகத்தை பிரபலப்படுத்த லண்டனில் தொலைக்காட்சி பேட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே 'ஐயர்ன் மேன்' படங்களில் நடித்து புகழடைந்துள்ள நடிகர் ராபட்ர் டவுனி ஜூனியர், அவெஞ்சர் முதல் பாகத்தைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்திலும், ஐயர்ன் மேன் பாத்திரத்தில் தோன்றுகிறார்.
பேட்டியில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியரிடம், அவரது கடந்த காலத்தைப் பற்றிய கேள்விகளைக் கேட்டார் தொகுப்பாளர் கிருஷ்ணன் குருமூர்த்தி. இதை எதிர்பார்க்காத ராபர்ட், "மன்னிக்கவும் நாம் இங்கு படத்தைப் பற்றி தானே பேச வந்திருக்கிறோம். நாம் என்ன செய்கிறோம்?" எனக் கேட்டுவிட்டு, அதிருப்தியில் வெளிநடப்பு செய்தார்.
இது பற்றி ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிருஷ்ணன் குருமூர்த்தி, "ஐயர்ன் மேன் நாயகனின் கடினமான தருணம்" என வர்ணித்துள்ளார். ராபர்ட்டின் ஜெயில் வாசம், அவருடைய தந்தையுடன் அவருக்கிருந்த உறவு, அவரது போதைப் பழக்கம் பற்றியெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டதால் அவர் அதிருப்தியடைந்துள்ளார்.
</p>