'எக்ஸ்-மென்' (X-Men) படங்களில் 'வோல்வரின்' (Wolverine) கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகர் ஹ்யூ ஜாக்மென் இதுவே தனது கடைசி எக்ஸ்-மென் படமாக இருக்குமென தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களில் எக்ஸ்-மென் வரிசை திரைப்படங்களும் முக்கியமானவை. இதுவரை வந்த 5 எக்ஸ்-மென் திரைப்படங்களுமே பெரிய வெற்றியை பெற்றுள்ளன. முக்கியமாக இதில், வோல்வரின் பாத்திரத்துக்கு ரசிகர்களிடையே சிறப்பு வரவேற்பு உள்ளது.
வோல்வரின் பாத்திரத்தை மட்டுமே வைத்தும் தனியாக 2 திரைப்படங்கள் உருவாகியுள்ளன. தற்போது 'எக்ஸ் மென்: அபோகலிப்ஸ்' (X—Men: Apocalypse) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. அதே நேரத்தில் 'வோல்வரின்' படத்தின் 3-ஆம் பாகமும் உருவாகி வருகிறது.
இந்நிலையில் வோல்வரின் பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஹ்யூ ஜாக்மென், வோல்வரின் பாத்திரத்தில் தான் தோன்றுவது இதுவே கடைசி முறையாக இருக்குமென தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "வோல்வரின், கடைசி முறையாக" என்ற தலைப்போடு ஒரு புகைப்படத்தை ஹ்யூ ஜாக்மென் பதிவேற்றியுள்ளார். ஆனால் அவர் எக்ஸ்-மென் படத்தை குறிப்பிடுகிறாரா, அல்லது வோல்வரீன் 3-ஆம் பாகத்தைக் குறிப்பிடுகிறாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
எக்ஸ்-மென் படங்களில் 'மிஸ்டீக்' (Mystique) என்ற பாத்திரத்தில் தோன்றும் நடிகை ஜெனிஃபர் லாரன்ஸும், இதுவே தனது கடைசி எக்ஸ்-மென் படமாக இருக்கும் என சென்ற வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்-மென் படத்தின் அடுத்த பாகம் மே 27, 2016 அன்றும், வோல்வரீன் 3-ஆம் பாகம் மார்ச் 3, 2017 அன்றும் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.