ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் தோன்றும் 'மிஷன் இம்பாஸிபில்' பட வரிசையில் 5-வது பாகத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 'மிஷன் இம்பாஸிபில் - ரோக் நேஷன்' (Mission Impossible - Rogue Nation) என இந்த பாகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
டாம் க்ரூஸுடன் இணைந்து ஜெரெமி ரென்னர், சைமன் பெக் ஆகியோர் நடிக்கின்றனர். மிஷன் இம்பாஸிபில் படங்களின் வித்தியாசமான, சாமர்த்தியமான சண்டைக் காட்சிகளுக்கென ரசிகர்கள் உள்ளனர். இந்த பாகமும் வழக்கம் போல உலகை அழிக்க நினைக்கும் வில்லன், அவனிடமிருந்து உலகத்தை காப்பாற்றும் நாயகன் என்ற கதையே என்றாலும், இந்த பாகத்தின் சண்டை காட்சிகளில் என்ன வித்தியாசம் இருக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல, ஈதன் ஹண்ட் என்ற பாத்திரத்தில் ரகசியப் பிரிவு போலீஸாக டாம் க்ரூஸ் தோன்றும் மிஷன் இம்பாஸிபில் படங்கள் அனைத்துமே வசூலில் சாதனை படைத்துள்ளன. 1996-ஆம் ஆண்டு முதல் பாகமும், கடைசியாக 2011-ஆம் ஆண்டு 4-ஆம் பாகமும் வெளியானது. 4-வது பாகம் உலகளவில் 695 மில்லியன் டாலர்கள் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
மிஷன் இம்பாஸிபில் - ரோக் நேஷன் வரும் ஜூலை 31-ஆம் தேதி வெளியாகிறது.
</p>