புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள 'ஸ்பைடர் மேன்' படத்தில், அந்தக் கதாபாத்திரத்தில் ஆப்பிரிக்க - அமெரிக்க நடிகரோ, அல்லது லத்தீன் நடிகரோ தோன்றக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
'தி ராப்' பத்திரிக்கையைச் சேர்ந்த ஜெஃப் ஸ்னீடர் கூறுகையில், "இந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை ஆனால். அடுத்த ஸ்பைடர் மேனாக நடிப்பது வெள்ளை நிறத்தவராக இருக்க மாட்டார். ஆப்பிரிக்க அமெரிக்கராகவோ, லத்தீன் நடிகராகவோதான் இருப்பார். இது 95 சதவீதம் உறுதி" என்றார்.
ஸ்பைடர் மேன் நாயகன் பள்ளி இறுதி ஆண்டில் படிப்பது போல புதிய கதை தொடங்கவுள்ளது. முன்னதாக டைலான் ஓ ப்ரெய்ன் அல்லது லோகன் லெர்மென் ஆகியோர் இந்த பாத்திரத்தில் நடிக்கலாம் என பரவலாகப் பேசப்பட்டது. இருவரும் அமெரிக்க நடிகர்கள். ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் இதற்கு முரணாக உள்ளது.
'பீட்டர் பார்க்கர்' என்ற பாத்திரமே ஸ்பைடர் மேன் காமிக்ஸில் நாயகனாக தோன்றுவது. ஆனால் 2011-ஆம் ஆண்டு வெளியான புதிய அல்டிமேட் ஸ்பைடர் மேன் என்ற பதிப்பில் 'மைல்ஸ் மொரால்ஸ்' என்ற பாத்திரம் ஸ்பைடர் மேனாக தோன்றியது. இந்தப் பாத்திரம் கருப்பின - லத்தீன் வழியைச் சேர்ந்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
எனவே, ஜூலை 28, 2017 அன்று வெளியாகப் போகும் புதிய ஸ்பைடர் மேன் படத்தில், மைல்ஸ் மொரால்ஸ் பாத்திரம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.