ஹாலிவுட்

இந்திய வம்சாவளி கலைஞர்கள் இருவருக்கு கிராமி விருது

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 57-வது கிராமி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிக்கி கேஜ் தயாரித்த 'விண்ட்ஸ் ஆஃப் சம்ஸாரா' (Winds of Samsara) என்ற ஆல்பம், 'பெஸ்ட் நியூ ஏஜ் ஆல்பம்' (Best New Age Album) என்ற விருதைத் தட்டிச் சென்றது.

ரிக்கி, தென் ஆப்பிரிக்க கலைஞரான கெல்லர்மேன் உடன் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கியிருந்தார். அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த ஆல்பம் தயாரிக்கப்பட்டிருந்தது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இன்னொருவரான நீலா வாஸ்வானி, 'ஐ அம் மலாலா' (I Am Malala) என்ற ஆல்பத்துக்காக சிறந்த குழந்தைகள் ஆல்பம் என்ற விருதை பெற்றார். வாஸ்வானி, ஐ அம் மலாலா புத்தகத்தின் ஒலி வடிவத்திற்கு குரல் கொடுத்திருந்தார்.

அதே நேரத்தில் சிறந்த உலக இசை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த சிதார் கலைஞர் ரவிசங்கரின் மகள் அனுஷ்கா சங்கருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

முக்கிய விருதுகளில், இசைக் கலைஞர் சாம் ஸ்மித், இந்த வருடத்தின் சிறந்த பாடல், சிறந்த அறிமுகக் கலைஞர் உள்ளிட்ட மூன்று விருதுகளைப் பெற்றார். இசைக் கலைஞர் பெக், சிறந்த இசை ஆல்பத்திற்கான விருதினைப் பெற்றார்.

இவற்றோடு, 'இன் தி லோன்லி ஹார்' (In the Lonely Hour) என்ற ஆல்பத்திற்காக சிறந்த பாப் ஆல்பத்திற்கான விருதையும் சாம் ஸ்மித் பெற்றார்.

பாடகர்கள் ஃபாரல் வில்லியம்ஸ் மற்றும் ரோசன்ன கேஷ் ஆகியோர் தலா 3 விருதுகளைப் பெற்றனர். தனது புகழ்பெற்ற "ஹாப்பி" பாடலை ஃபாரல் வில்லியம்ஸ் நிகழ்ச்சியில் பாடினார்.

ரிஹானா, கேடி பெர்ரி, மடோனா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் தங்கள் பாடல்களைப் பாடி சிறப்பித்தனர்.

SCROLL FOR NEXT