சோனி பிக்சர்ஸ் நிறுவனம் புதிய 'ஸ்பைடர் மேன்' படத்திற்கான வேலைகளைத் துவக்கியுள்ளது. ஜூலை 28-ஆம் தேதி, 2017 அன்று புதிய ஸ்பைடர் மேன் திரைப்படம் வெளியாகவுள்ளது.
அமெரிக்காவின் மிகப் பிரபலமான காமிக்ஸ் நிறுவனம் மார்வல். இதன் பாத்திரங்களான 'ஐயர்ன் மேன்', 'ஹல்க்', 'தார்', 'கேப்டன் அமெரிக்கா' ஆகியவை கடந்த சில வருடங்களாக திரைப்படங்களாக மாறி வசூலை குவித்து வருகின்றன. அனைத்து பாத்திரங்களும் இணைந்து நடித்த 'அவெஞ்சர்ஸ்' படமும் வசூல் சாதனை படைத்தது.
'ஸ்பைடர் மேன்' பாத்திரமும் மார்வல் உலகைச் சேர்ந்ததே. இருந்தாலும் 1999-ஆம் ஆண்டு, இந்தப் பாத்திரத்திற்கான உரிமையை 7 மில்லியன் டாலர்களுக்கு சோனி வாங்கியது. இதனால் ஸ்பைடர் மேன் தனி சூப்பர் ஹீரோவாகவே உலா வந்தார். இந்நிலையில் மார்வல் நிறுவனத்தின் கெவின் ஃபீஜ் மற்றும் சோனி நிறுவனத்தின் ஏமி பாஸ்கல் இருவரும் இணைந்து புதிய ஸ்பைடர் மேன் படத்தை தயாரிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஸ்பைடர் மேன் பாத்திரம் இனி மார்வல் உலக பாத்திரங்களுடனும் உலா வரும்.
சோனியும் மார்வலும் இணைந்தாலும், ஸ்பைடர் மேன் படங்களின் தயாரிப்பு, விநியோகம், உரிமை மற்றும் படத்தின் கதை, திரைக்கதை குறித்த உரிமம் அனைத்தும் சோனி நிறுவனத்திடமே இருக்கும்.
டாபி மெக்வயர் நடிப்பில் 2002-ஆம் ஆண்டு தொடங்கி 2007 வரை 3 ஸ்பைடர் மேன் திரைப்படங்களும், ஆன்ட்ரூ கார்ஃபீல்ட் நடிப்பில் 2012-ஆம் ஆண்டு தொடங்கி 2014 வரை இரண்டு புதிய ஸ்பைடர் மேன் படங்களும் வெளியாகின. தற்போது ஸ்பைடர் மேன் பாத்திரத்தில் நடிக்க புதிய நடிகர் தேர்வு செய்யப்படவுள்ளார்.