பிரபல நகைச்சுவைப் பாத்திரமான 'மிஸ்டர் பீன்' மீண்டும் தோன்றவுள்ளதாக அந்தப் பாத்திரத்தை உருவாக்கி, ஏற்று நடித்த பிரிட்டிஷ் நடிகர் ரோவன் அட்கின்ஸன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் பாராமல் அனைவரும் ரசித்து சிரித்த பாத்திரம் 'மிஸ்டர் பீன்'. அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு குழந்தைகளைப் போல 'பீன்' செய்யும் சேட்டைகள் தொலைக்காட்சித் தொடராக உலகம் முழுவதும் பிரபலமானது.
'மிஸ்டர் பீன்' பாத்திரத்தை வைத்து இரண்டு திரைப்படங்களும், கார்டூன் தொடரும் வெளியாகியுள்ளன. கடைசியாக இந்த பாத்திரம், 2007-ம் ஆண்டு வெளியான 'மிஸ்டர் பீன்ஸ் ஹாலிடே' என்ற திரைப்படத்தில் தோன்றியது. அடுத்து 2012-ம் ஆண்டும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவில் தோன்றியது.
தற்போதும் 'காமிக் ரிலீஃப்' என்ற அமைப்புக்காக நன்கொடை திரட்ட, ரோவன் அட்கின்ஸன் மீண்டும் மிஸ்டர் பீன் பாத்திரத்தை கையிலெடுத்துள்ளார். புதிய மிஸ்டர் பீன் செய்யப்போகும் சேட்டைகளைப் பார்க்க உலகெங்கிலும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இது மார்ச் 13-ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. ரோவன் அட்கின்ஸனுக்கு கடந்த ஜனவரி 6-ம் தேதி 60 வயதானது என்பது கூடுதல் செய்தி.