கடந்த ஆஸ்கர் விருது விழாவில் 7 ஆஸ்கர்களை அள்ளிய கிராவிட்டி திரைப்படத்தின் இசையில்லாத புதிய பதிப்பை இயக்குநர் அல்ஃபோன்ஸோ குவரோன் முடிவு செய்துள்ளார்
விண்வெளியில் சப்தம் கிடையாது. இதை மனதில் வைத்து, கிராவிட்டி படத்தில், விண்கலத்தில் நடக்கும் காட்சிகளிலும், பாத்திரங்கள் ஹெல்மட் அணிந்து பேசும் காட்சிகளிலும் மட்டும் சிறப்பு சப்தங்களை இயக்குநர் அல்ஃபோன்ஸோ குவரோன் பயன்படுத்தியிருந்தார்.
அமைதியான விண்வெளிக் காட்சிகளில் ஸ்டீவன் பிரைசின் இசை பல இடங்களில் நிறைந்திருக்கும். அவரது இசைக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. தற்போது கிராவிட்டி படத்தின் சிறப்பு ப்ளூ ரே பதிப்பு வெளியாகவுள்ளது. இதில் விண்வெளியில் இருப்பது போன்றே சப்தம் ஏதுமில்லாமல் காட்சிகள் ஓடும் என குவரோன் தெரிவித்துள்ளார். "இசை இல்லாமல் ஓர் உன்னதமான திரைப்பட அனுபவமாக இது இருக்கும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய பதிப்பில் இசை இல்லையென்றாலும் சாண்ட்ரா புல்லக் மற்றும் ஜார்ஜ் க்ளூனி பாத்திரங்களின் வசனங்கள் இருக்கும்.