ஹாலிவுட்

மேலும் இரண்டு பாண்ட் படங்களில் டேனியல் க்ரெய்க்?

ஐஏஎன்எஸ்

நடிகர் டேனியல் க்ரெய்க், மேலும் இரண்டு பாண்ட் படங்களில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் க்ரெய்க், 2006-ஆம் ஆண்டு கேஸினோ ராயல் படத்தின் மூலம் பாண்ட் வேடத்தை ஏற்றார். தொடர்ந்து குவாண்டம் ஆஃப் சொலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்டர் ஆகிய மூன்று பாண்ட் படங்களில் நடித்துள்ளார். டேனியல் க்ரெய்க் என்றால் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மட்டுமே ஞாபகம் வரும் அளவுக்கு, விமர்சனங்களை மீறி ரசிகர்களை ஈர்த்தார்.

சில மாதங்களுக்கு முன்பு, தொடர்ந்து இந்த பாத்திரத்தில் நடிப்பீர்களா என பத்திரிகையாளர் ஒருவர் கேட்டதற்கு, அதற்கு எனது கையை அறுத்துக் கொள்வேன் என பதிலளித்து ஆச்சரியப்படுத்தினார். அதனால் அடுத்த ஜேம்ஸ் பாண்டாக யார் நடிப்பார் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், தயாரிப்பாளர் பார்பரா, டேனியலை சந்தித்து பேசி மேலும் இரண்டு படங்களில் நடிக்க சம்மதிக்க வைத்துவிட்டதாக பிரிட்டைன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர், ஷாட்டர் ஹாண்ட் என இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேனியலுக்கான ரசிகர் கூட்டம் அதிகம். அவர் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு வசூலில் புத்துயிர் கிடைத்துள்ளது. எனவே அவர் இவ்வளவு சீக்கிரம் அந்த வேடத்தை விட்டுக்கொடுப்பதை தயாரிப்பாளர்கள் விரும்ப மாட்டார்கள். 25-வது ஜேம்ஸ் பாண்ட் படத்துக்கான திரைக்கதை தயாராக உள்ளது. அதனால் மேலும் தாமத்திக்காமல் அவரை சம்மதிக்க வைத்து விட்டதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 26-வது படத்தின் கதை, 1969ஆம் ஆண்டு வெளியான ஆன் ஹெர் மெஜஸ்டி’ஸ் சீக்ரட் சர்வீஸ் என்ற பாண்ட் படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறினார். மேலும், "அதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அப்படி ரீமேக்காக இருக்கும்பட்சத்தில், அந்தப் படத்தின் கதைப்படி பாண்டுக்கு திருமணமாகி, அவரது மனைவி கொல்லப்படுவார். இது இந்த பாத்திரத்திலிருந்து டேனியல் க்ரெய்க் விடைபெற சரியான படமாக இருக்கும்" என்றார்

SCROLL FOR NEXT