புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்க தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் அறிவித்துள்ளார். இது ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களையும், நோலன் ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐஎம்டிபி தளம் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக கிறிஸ்டோபர் நோலனின் நிறுவனத்தையும் சேர்த்திருந்தது, முன்னரே யூகங்கள் கிளம்பக் காரணமாக இருந்தது. தற்போது படத் தயாரிப்பாளர்கள் தன்னிடம் பேசி வருவதாகவும், ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்குவதில் தனக்கு விருப்பமே என்றும் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்துள்ளார்.
"தயாரிப்பாளர்கள் பார்பரா மற்றும் மைக்கேல் வில்சன் ஆகியோர் கடந்த சில வருடங்களாகவே இதுபற்றி என்னிடம் பேசி வருகின்றனர். எனக்கு அந்தக் கதாபாத்திரம் மிகவும் பிடிக்கும். அவர்கள் அதை வைத்து எடுக்கும் படங்களையும் ஆர்வத்துடன் எதிர்நோக்குவேன். ஒருவேளை, ஒருநாள் நான் அதை இயக்கலாம். நாம் அந்த வேலைக்கு தேவைப்பட வேண்டும். அதற்கு ஒரு மறு துவக்கம் தேவைப்படும். அதற்கு நீங்கள் தேவைப்பட வேண்டும்" என நோலன் கூறியுள்ளார்.
நோலன் தற்போது 'டங்கிர்க்' படத்தை இயக்கியுள்ளார். படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ஜேம்ஸ் பாண்டாக நடித்து வந்த டேனியல் க்ரெய்க், அந்த கதாபாத்திரத்திலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். எனவே புது ஜேம்ஸ் பாண்ட் படத்தை மறு துவக்கம் (reboot) போல ஆரம்பிக்கும் நிலை தயாரிப்பு தரப்புக்கு உள்ளது.
இதற்கு முன், இதே சூழ்நிலையில் உருவான 'பேட்மேன்' படத்துக்கு கிறிஸ்டோபர் நோலன் இயக்குநராயிருந்தார். பேட்மேனின் மறு துவக்கமாக அவர் இயக்கிய 'பேட்மேன் பிகின்ஸ்', 'டார்க் நைட்', 'டார்க் நைட் ரைஸஸ்' ஆகிய படங்கள் பேட்மேன் கதாபாத்திரத்துக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்ததோடு, விமர்சகர்கள் பாராட்டையும், வசூலையும் அள்ளிக்குவித்தது.
தற்போது கிறிஸ்டோபர் நோலன் ஜேம்ஸ் பாண்ட் படத்தை இயக்கும் பட்சத்தில், அவரது பார்வையில் அது எப்படி திரையில் விரியும் என்பதைப் பார்க்கும் ஆவல் பலருக்கு உருவாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடக்கிறது என்பதை மட்டுமே நோலன் உறுதியாக சொல்லியுள்ளார். எனவே உறுதியான தகவலுக்கு ரசிகர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வெண்டும்.
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படம் 2018ஆம் வருட துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு வருட இறுதியில் வெளியாகும் எனத் தெரிகிறது.