ஹாலிவுட்

ஹாலிவுட்டில் புதிதாகத் தயாராகும் அலிபாபாவும் 40 திருடர்களும்

பிடிஐ

'அலிபாபவும் 40 திருடர்களும்' கதையை ஹாலிவுட்டில் மீண்டும் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர் ஆங்கிலத்தில் 1944-ம் ஆண்டும், பிரெஞ்ச் மொழியில் 1954-ம் ஆண்டும் இதே கதை படமாக எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரேபிய இலக்கியத்தைத் தழுவிய அலிபாபாவும் 40 திருடர்களும் கதை உலகப் பிரசித்தம். இந்தியாவிலும் இந்தக் கதை வெவ்வேறு மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ட்வென்டியத் சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் இந்தக் கதையை எடுக்க முன்வந்துள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் நாயகனாக நடிக்க 'ஹங்கர் கேம்ஸ்' படத்தில் நடித்த லியாம் ஹெம்ஸ்வொர்த், 'எக்ஸ்-மென்' திரைப்படத்தில் நடித்த இவான் பீட்டர்ஸ் உள்ளிட்டோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.' பிங்க் பேந்தர்', 'ரியல் ஸ்டீல்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷான் லெவி இத்திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாகசங்களோடு நகைச்சுவையும் நிறைந்த படமாக அலிபாபா உருவாகும் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT