ஹாலிவுட்

ஆஸ்கரைப் புறக்கணித்த ஃபர்ஹாதி சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட விருதை பெற்றார்

ஐஏஎன்எஸ்

இரானியப் படமான 'தி சேல்ஸ்மேன்' சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது. ஆனால் அதன் இயக்குநர் அஸ்கார் ஃபர்ஹாதி, ட்ரம்பின் தடை உத்தரவை கண்டிக்கும் வகையில் விழாவை புறக்கணித்தார்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்து முடிந்தது. இதில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படமாக, இரானியப் படம் 'தி சேல்ஸ்மேன்' தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் இயக்குநர் அஸ்கார் ஃபர்ஹாதி, ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் நுழைய தடை விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம், ஆஸ்கர் விழாவை புறக்கணித்திருந்தார்.

ஆனால் ஆஸ்கருக்கு அவர் அனுப்பிய அறிக்கை மேடையில் வாசிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, இரானிய விண்வெளி வீராங்கனை அனுஷா அன்சாரி விழாவுக்கு வந்திருந்தார். அவர் ஃபர்ஹாதியின் கடிதத்தை மேடையில் படித்தார். அதில், "என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் இன்றிரவு உங்களுடன் இருக்க முடியவில்லை. எனது இந்த முடிவு, எனது நாட்டு மக்களின் மேல் நான் வைத்திருக்கும் மரியாதையின் காரணமாக. மேலும் புலம்பெயர்பவர்களை அமெரிக்காவுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் மனிதத்தன்மையற்ற சட்டத்தினால் அவமதிக்கப்பட்ட மற்ற 6 நாடுகளுக்காக.

உலகில் இப்படியான பிரிவினை பயத்தை உருவாக்கும். ஆக்கிரமிப்புக்கும், போருக்கும் வஞ்சகமாக நியாயம் கற்பிக்கும். இந்த போர்கள், ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட நாடுகளிலேயே ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் தடுக்கும்.

திரைப்படம் உருவாக்குபவர்களால் தங்கள் கேமராவின் மூலம் மனிதர்களின் பண்புகளைக் காண்பிக்கலாம், பல்வேறு தேசம் மற்றும் மதத்தின் மீது உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பத்தை உடைக்கலாம். நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே புரிதலை ஏற்படுத்தலாம். அந்த அனுதாபம், புரிதல் இன்று அதிகத் தேவையாக இருக்கிறது." என்று கூறியிருந்தார்.

அஸ்கார் ஃபர்ஹாதி, 2012-ஆம் ஆண்டு எ செபரேஷன் படத்துக்காக சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கரைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விருதைப் பெற்ற முதல் இரானிய திரைப்படம் என்ற பெருமையும் அவருக்கு சேர்ந்தது.

SCROLL FOR NEXT