ஹாலிவுட்

தனது படத்தின் ப்ரீமியரில் கண்ணீர் சிந்திய ஏஞ்சலீனா ஜோலி

பிடிஐ

நடிகை ஏஞ்சலீனா ஜோலியின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் 'அன்ப்ரோகன்' ('Unbroken'). லூயி ஸாம்பெரினி என்ற ஒலிம்பிக் வீரர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற போர் வீரரின் வாழ்க்கையைக் கூறும் படம் இது.

இரண்டாம் உலகப் போரில், போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாக, லூயி சக வீரர்கள் இரண்டு பேருடன் நடுக் கடலில் 47 நாட்கள் தப்பிப் பிழைக்கிறார். அவரை ஜப்பான் கடற்படை பிடித்துக் கொண்டு போகிறது. தொடர்ந்து லூயி பெற்ற அனுபவங்களை இப்படம் விவரிக்கிறது.

இத்திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் தனது கணவர் பிராட் பிட் உடன், ஏஞ்சலீனா ஜோலி பங்கேற்றார். ஜூலை மாதம் காலமான லூயி ஸாம்பெரினி, ஜோலியைப் பற்றி கூறியது ப்ரீமியரில் வாசித்துக் காண்பிக்கப்பட்டது.

லூயி தனது குறிப்பில், "ஏஞ்சலினா எனது வாழ்க்கையில் முக்கியமானவராக ஆகிவிட்டார். அவருக்கு என்ன வேண்டும் என்று அவருக்கு சரியாகத் தெரியும். தான் என்ன செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். அவரை நான் நூறு சதவீதம் நம்புகிறேன். அன்ப்ரோகன் திரைப்படம் மிகச் சிறந்த படமாக இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது" என தெரிவித்திருந்தார்.

இதைக் கேட்டவுடன் ஜோலி கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்தார். ஏஞ்சலினா ஜோலியின் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது திரைப்படம் அன்ப்ரோகன். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT