ஹாலிவுட்

ஆஸ்கர் விருது வென்ற ராக்கி இயக்குநர் ஜான் ஜி.அவில்ட்சென் காலமானார்

பிடிஐ

சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த 'ராக்கி' திரைப்படத்தை இயக்கிய ஜான் ஜி.அவில்ட்சென் காலமானார். அவருக்கு வயது 81.

அவில்ட்சென் கணையப் புற்றுநோய்க்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிடார்ஸ்-சினாய் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாக அவரது மகன் ஆண்டனி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இலினோய்ஸ் மாகாணத்தில் ஓக் பார்க் எனுமிடத்தில் ஜான் ஜி.அவில்ட்சென் பிறந்தார். 1970ல் 'ஜோ' எனும் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநரானார். இப்படம் விமர்சன பூர்வமாகவும் சிறந்த படம் என்று கருதப்பட்டது. இதில் ஹிப்பிகளையும் கறுப்பர்களையும் வெறுக்கும் ஒரு தொழிலாளியாக நடித்த பீட்டர் பாயலுக்கு இப்படத்தின்மூலம் பெயரும் புகழும் தேடிவந்தது. இதில் சூசன் சரண்டன் நாயகியாக நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'சேவ் தி டைகர்', 1973ல், 46-வது ஆஸ்கருக்கான மூன்று பரிந்துரைகளை பெற்றது. சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த ஜாக் லெமோனுக்குப் பெற்றுத்தந்தது. இப்படம் தற்கால அமெரிக்க வாழ்க்கையின் ஊடே மனித உறவுக்களுக்கிடையே உருவாகும் மோதல்களை எடுத்துக் காட்டியது.

இவர் கடைசியாக இயக்கியது ஒரு ஆக்ஷன் படம். 1999-ல் வெளிவந்த 'இன்பெர்னோ' என்ற இத்திரைப்படத்தில் ஜான் கிளாட் வான் டேம்மி, டேனி ட்ரெஜோ மற்றும் பாட் மோரிடா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் ஜப்பானிய இயக்குநரான அகிரா குரோசோவா இயக்கிய 'யோஜூம்போ' திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

இவரது ஆஸ்கர் விருதுபெற்ற படமான 'ராக்கி'யில் நடித்த ஸ்டாலோன் தனது மூத்த திரைப்பட இயக்குநருக்கு இன்ஸ்டாகிராம் வழியாக தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

''தங்கள் ஆத்மா அமைதியில் துயிலட்டும். நீங்கள் விரைவில் சொர்க்கத்தில் வெற்றிப்படங்களை இயக்கப் போகிறீர்கள், சத்தமின்றி. நன்றி'' என்று அந்த இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அவில்ட்சென் தனது மகள் பிரிட்ஜெட், மற்றும் மகன்கள் ஆண்டனி, ஜோனாதன் மற்றும் ஆஷ்லே ஆகியோரின் ஆதரவில் வாழ்ந்து வந்தார்.

SCROLL FOR NEXT