ஹாலிவுட்

புதிய பேட்மேன் மீது பொறாமை கொண்ட பழைய பேட்மேன்

பிடிஐ

அடுத்த 'பேட்மேன்' திரைப்படத்தில் பேட்மேனாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் பென் ஆஃப்லெக் மீது பொறாமை கொண்டதாக நடிகர் கிறிஸ்டியன் பேல் தெரிவித்துள்ளார்.

2005-ஆம் ஆண்டு வெளியான 'பேட்மேன் பிகின்ஸ்' திரைப்படத்தில் தொடங்கி, 'டார்க் நைட்', 'டார்க் நைட் ரைஸஸ்' உள்ளிட்ட திரைப்படங்களில் பேட்மேனாக நடித்தவர் கிறிஸ்டியன் பேல். 'டார்க் நைட் ரைஸஸ்' திரைப்படத்தோடு அந்த 3 படங்களின் தொடர் முடிந்ததால், பேட்மேன் பாத்திரம் சூப்பர்மேனோடு தோன்றும், 'பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்' என்ற புதிய திரைப்படம் தயாராகவுள்ளது.

இதில் பேட்மேனாக நடிக்க நடிகர் பென் ஆஃப்லெக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இச்செய்தியைக் கேட்டதும், இதற்கு முன் பேட்மேனாக நடித்த நடிகர் கிறிஸ்டியன் பேல் பொறாமை கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி பேல் கூறியதாவது: "ஒரு வகையில் பேட்மேன் பாத்திரத்தில் நடிப்பதை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும், உள்ளுக்குள் இன்னொரு படம் பேட்மேனாக நடிக்கலாம் என்றும் தோன்றியது. இதை நான் மறைக்க விரும்பவில்லை. எனவே வேறொரு நடிகர் அந்தப் பாத்திரத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார் என்று கேள்விப்பட்டவுடன் சற்று உறைந்துதான் போனேன்.

ஆனால் எனக்கு 40 வயதாகிவிட்டது. இதற்கு மேல் இப்படி பொறாமை கொள்ளலாகாது என்று புரிந்தது. இந்த பாத்திரத்தைப் பற்றி நான் இன்னும் பென்னிடம் பேசவில்லை. ஆனால் இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது நான் கஷ்டப்பட்டு கற்றுக் கொண்டதை அவருக்கு இ-மெயிலில் அனுப்பியுள்ளேன். கண்டிப்பாக என்னிலிருந்து வேறுபட்டு நடிக்க பென் அனைத்து முயற்சிகளையும் செய்வார் என்று நினைக்கிறேன்"

இவ்வாறு கிறிஸ்டியன் பேல் தெரிவித்துள்ளார். 'ஆர்கோ', 'கான் கேர்ள்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பென் ஆஃலெக் இதற்கு முன் 'டேர்டெவில்' என்ற சூப்பர்ஹீரோ பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அந்தப் படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT