ரூமி திரைப்படத்தில் டி கேப்ரியோவை கதாநாயகனாக்க எதிர்ப்பு தெரிவித்து தொடங்கப்பட்ட கையெழுத்து இயக்கத்துக்கு ஆயிரக்கணக்கானோர் அதரவு தெரிவித்துள்ளனர்.
"இஸ்லாமிய நடிகர்களுக்கு நேர்மறை பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதில்லை; எதிர்மறை பாத்திரங்களில் மட்டுமே அவர்கள் நடிக்கின்றனர் எனவும், இதை 'ஹாலிவுட் ஒயிட்வாஷிங்' எனக் கூறியுள்ளனர்" இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கியவர்கள்.
பாரசீக கவிஞரான ரூமியின் வாழ்க்கை வரலாற்றை 'ரூமி' என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுக்க உள்ளனர். இதில் ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ ரூமியாக நடிக்க உள்ளார். அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கக்கூடாது எனவும் மத்திய கிழக்கு நாடுகளைச் சார்ந்த ஒருவரையே ரூமியாக நடிக்க வைக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
'ரூமி' படம் குறித்தும், அதில் நடிப்பவர்கள் குறித்தும் அதன் திரைக்கதையாளர் டேவிட் ஃப்ரான்ஸோனி அளித்த பேட்டியால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
பேட்டியில், ''படத்தில் வாழ்க்கை வரலாற்றை 'ரூமி' என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுக்க உள்ளோம். இதில் ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ முதன்மை கதாபாத்திரத்திலும், 'அயர்ன்மேன்' நடிகர் ராபர்ட் டவ்னி ஜூனியர் இரண்டாவது முதன்மைப் பாத்திரத்திலும் நடிக்க உள்ளனர்.
மேற்கத்திய சினிமாக்களில் இஸ்லாமிய கதாபாத்திரங்கள் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்படுகின்றன. இதை மாற்றுவது எனக்கு சவாலாக இருக்கும்'' என்று தெரிவித்திருந்தார் டேவிட் ஃப்ரான்ஸோனி.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலரி ஜேனோவிக் என்பவர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருக்கிறார். அதில், ஆயிரக்கணக்கானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
''இஸ்லாமிய நடிகர்களுக்கு நேர்மறை பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதில்லை; எதிர்மறை பாத்திரங்களில் மட்டுமே நடிக்கின்றனர். இதை ஹாலிவுட் ஒய்ட்வாஷிங் என்றே கூறவேண்டும்" என அந்த கையெழுத்து மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரூமியின் பாத்திரத்தில் லியார்னடோ டிகாப்ரியோ நடித்தால் வரலாறு மாற்றி எழுதப்படும். இஸ்லாமியர்களின் சாதனைகளை மற்றவர்கள் சொந்தம் கொண்டாடி வெள்ளை இனத்தவருக்கு அளித்ததாக மாறிவிடும்.
மேலும் அவர் கூறும்போது, "மக்கள், ரூமி என்ற கவிஞரைப் பற்றி யோசித்தாலே வெளிர் தோல், பொன்னிற முடி, நீலக் கண்களைக் கொண்ட டிகாப்ரியோதான் நினைவுக்கு வருவார். இஸ்லாமிய நடிகர்களின் பெரும்பாலானோர் தீவிரவாதிகளாகவே வகைப்படுத்தப்படுகின்றனர். ஒரு வேளை படங்களில் அவர்கள் நேர்மறையாகக் காட்டப்பட்டாலும், அவர் வெள்ளை இன நடிகருக்கு அடுத்தபடியாகவே காட்டப்படுகிறார்.
'ரூமி' படத்தில் நடிப்பவர்கள் யார் என இன்னும் இறுதி செய்யப்படவில்லை. நாம் அனைவரும் இணைந்து அதை மாற்றமுடியும்'' என்றார்.