'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம் ஜூன் 28 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம், சர்வதேச அளவில் பிரம்மாண்ட வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூலை அள்ளிக் குவித்த 'அவெஞ்சர்ஸ்' வெகுவேகமாக 2 பில்லியல் டாலர் என்ற வசூலைத் தொட்டது.
இதுவரை திரைப்பட வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்'. அவதாரின் சாதனையை 'அவெஞ்சர்ஸ்' முறியடிக்கும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
'அவதார்' 2.788 பில்லியன் அமெரிக்க டாலர்களை இதுவரை வசூலித்துள்ளது. 'அவெஞ்சர்ஸ்' 2.743 பில்லியன் டாலர்கள் வரை வசூலித்தது. ஆனால் தற்போது திரைப்படம் வெளியாகி சில மாதங்கள் முடிந்துவிட்டதால் வெகு சில திரையரங்குகளில் மட்டுமே படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
'அவதார்' வசூல் சாதனையை முறியடிக்க இன்னும் 45 மில்லியன் டாலர்கள் தேவை என்ற நிலையில் இந்த ஓட்டம் பத்தாது என்பதை உணர்ந்த டிஸ்னி - மார்வல் தயாரிப்புத் தரப்பு படத்தை மீண்டும் பரவலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இம்முறை கூடுதலாக இன்னும் சில காட்சிகளை ரசிகர்களுக்காக சேர்த்து வெளியிட முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனத் தலைவர் கெவின் ஃபீஜ் கூறுகையில், "இது கூடுதலான ஓடும் நேரத்தோடு இருக்காது. ஆனால் திரையரங்கில் வெளியாகவுள்ள பதிப்பில், படத்தின் முடிவில் கூடுதலாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காக நாங்கள் கூடுதலாக விளம்பரப்படுத்த உள்ளோம். காத்திருந்து, கடைசி வரை பார்த்தால் இதற்கு முன் நீக்கப்பட்டிருந்த ஒரு காட்சி, ஒரு சின்ன அஞ்சலி, இன்னும் சில ஆச்சரியங்கள் உங்களுக்காக இருக்கும். அடுத்த வாரம் படம் வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.
இது பற்றி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் 'அவதார்' படத்தோடு சேர்த்து ஒப்பிட்டும், கலாய்த்தும், பாராட்டியும் மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.