ஜேம்ஸ் பாண்ட் படத்திலிருந்து விலகியது, தான் தொடர் படங்கள் என்று சொல்லப்படும் ஃப்ரான்ச்சைஸ் (franchise) படங்களை இயக்க சரியான ஆள் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள உதவியதாக பாயல் கூறியுள்ளார்.
ஸ்லம்டாக் மில்லினியர் படம் மூலம் இந்தியாவில் பிரபலமானவர் இயக்குநர் டேனி பாயல். அதற்கு முன்பும் இவர் எடுத்தப் படங்கள் மேற்கில் பிரபலமானவை.
டேனியல் க்ரெய்க் கடைசியாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் அடுத்த படத்தை டேனி பாயல் இயக்குவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் தரப்போடு கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து விலகினார் டேனி பாயல். அவருக்கு பதில் ட்ரூ டிடெக்டிவ் டிவி சீரிஸ் இயக்குநர் கேரி ஜோஜி படத்தை இயக்குகிறார்.
இந்த விலகல் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள பாயல், "நான் என் பாடத்தைக் கற்றுக்கொண்டேன். நான் தொடர் படங்கள் இயக்க பொறுத்தமற்றவன். அதை தேர்ந்தெடுத்தால் ஒரே குழியை மீண்டும் மீண்டும் தோண்டுவது போல. நான் இது போன்ற படங்களுக்கு சரிபட்டு வர மாட்டேன் என்பது தான் நேர்மையான பதிலாக இருக்கும். பாண்ட் படத்தில் வேலை செய்யும்போது என்னைப் பற்றி நானே தெரிந்து கொண்டேன். நான் கதாசிரியர்களோடு இணைந்து வேலை செய்பவன். அதை உடைக்கத் தயாராக இல்லை.
பாண்ட் படத்தின் பணிகளும் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தன. ஆனால் அவர்களால் எங்கள் வழிக்கு வர முடியவில்லை. எனவே பிரிய முடிவெடுத்துவிட்டோம். கதை எப்படி இருந்தது என்பதைச் சொல்வது சரியாக இருக்காது. ஏனென்றால் கேரி என்ன செய்யப் போகிறார் என்பது தெரியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பாண்ட் 25 படத்திலிருந்து விலகியது மிகப்பெரிய வெட்கம் என்று டேனி பாயல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.