ஹாலிவுட்

திரை விமர்சனம் - டாய் ஸ்டோரி 4

செய்திப்பிரிவு

நாம் குழந்தைகளாக இருந்தபோது விளையாடிய பொம்மைகள் நாம் இல்லாத போது என்ன செய்து கொண்டிருக்கும்? இந்தச் சிறிய கற்பனைதான் 'டாய் ஸ்டோரி' படங்களின் ஒற்றை வரி.

இந்த ஒற்றை வரியை வைத்துக்கொண்டு 24 ஆண்டுகளாக ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறது டிஸ்னியின் பிக்ஸார்.

’டாய் ஸ்டோரி 3’ படத்தின் கதைக்குப் பிறகான காலகட்டத்தின் ஃப்ளாஷ்பேக்கோடு தொடங்குகிறது 'டாய் ஸ்டோரி 4'-ன் கதை. ரிமோட் கன்ட்ரோல் பொம்மை கார் ஒன்று வீட்டுக்குள் வெளியே மழையில் அடித்துச் செல்கிறது. நாயகனான woody பொம்மையும், மற்ற பொம்மைகளும் சேர்ந்து அதைக் காப்பாற்றி விடுகின்றன. அந்த சமயத்தில் பொம்மைகளின் ஓனரிடமிருந்து Bo என்ற பொம்மை ஒரு நபரால் வாங்கப்படுகிறது. அதைத் தடுக்க woody எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அதன் பிறகு பொம்மைகளின் தற்போதைய உரிமையாளரான andy பொம்மைகளை bonnie என்ற சிறுமியிடம் ஒப்படைக்கிறான். (இந்தக் காட்சியோடுதான் 'டாய் ஸ்டோரி-3' படம் முடிந்திருக்கும்).

bonnie முதல் நாள் பள்ளிக்குச் செல்கிறாள். முதல் நாள் பள்ளியில் அவள் தனியாக உணரக்கூடாது என்பதற்காக woodyயும் அவளுடையே புத்தகப் பையில் ஒளிந்து கொண்டு அவளோடு பள்ளிக்குச் செல்கிறது.

பள்ளியில் செய்முறைப் பயிற்சியின் போது முட்கரண்டி, இன்ன பிற குப்பைப் பொருட்களின் மூலம் ஒரு பொம்மையை உருவாக்குகிறாள் bonnie. அதற்கு forky என்றும் பெயரிடுகிறாள். அந்த பொம்மைக்கு உயிர் வந்து விடுகிறது. ஆனால் குப்பைப் பொருட்களால் செய்யப்பட்டதால் குப்பை இருக்குமிடத்தை நோக்கியே அது ஓடுகிறது. Bonnie அந்த பொம்மையை மிகவும் விரும்புவதால் woody அதைக் குப்பைக்குச் செல்லாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது.

சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் bonnieயின் பெற்றோர் அனைத்து பொம்மைகளையும் தங்களோடு அழைத்துச் செல்கிறனர். அப்போது அவர்களுடைய வேன் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது forky வேனிலிருந்து வெளியே குதித்து விடுகிறது. forkyயை தேடுவதற்காக woodyயும் வேனிலிருந்து வெளியே குதிக்கிறது. forkyஐ தேடி கண்டுபிடிக்கும் woody ஒரு வழியாக அதை சமாதானப்படுத்தி bonnie குடும்பம் செல்லும் ஒரு தீம் பார்க்குக்கு அழைத்து வருகிறது.

போகும் வழியில் ஒரு அருங்காட்சியகத்தில் ஃப்ளாஷ்பேக்கில் பிரிந்து சென்ற Bo பொம்மைக்கு பிடித்தமான விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அருங்காட்சியகத்தின் உள்ளே செல்கிறது woody. அதன் பின்னர் என்ன நடந்தது? bonnieயிடம் forky மீண்டும் சேர்க்கப்பட்டதா? Bo பொம்மையை woody மீண்டும் கண்டுபிடித்ததா? என்பதே ’டாய் ஸ்டோரி-4’ படத்தின் கதை.

1994-ம் ஆண்டு வெளியான ’டாய் ஸ்டோரி’ படவரிசையில் நான்காவது படம் இது. மூன்றாம் பாகம் வெளியாகி 9 வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் படம் இது. கிட்டத்தட்ட 24 வருடங்களாக ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையே டிஸ்னியின் பிக்ஸார் நிறுவனம் கட்டிப் போட்டு வைத்திருப்பது திரையரங்கில் ஒவ்வொரு காட்சிக்கும் பறக்கும் விசில் சத்தங்களே சாட்சி.

’டாய் ஸ்டோரி’யின் முதல் மூன்று பாகங்களைப் போலவே இதிலும் விறுவிறுப்பு, காமெடி, திருப்பம் என்று அனைத்தும் இருக்கிறது. ஆனாலும் மற்ற பாகங்களை விட இதில் கொஞ்சம் கூடுதலாக நகைச்சுவை காட்சிகள் அதிகம். அதிலும் ducky and bunny என்ற பொம்மைகள் வரும் காட்சிகளில் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். பிக்ஸார் அனிமேஷன் படங்களுக்கே உரிய சின்ன சின்ன புத்திசாலித்தனமான தருணங்களும் ஆங்காங்கே இருக்கிறது.

பிக்ஸார் படங்களின் அனிமேஷன் பற்றி சொல்லவே வேண்டாம். கதாபாத்திரங்களின் முக பாவனைகள், அசைவுகள் என குட்டி குட்டி விஷயங்களிலும் வழக்கம்போல பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். Stephany Folsom, Andrew Stanton ஆகியோர் திரைக்கதை எழுத josh cooley என்பவர் இயக்கியுள்ளார்.

’டாய் ஸ்டோரி 3’-ல் இருந்த எமோஷனல் காட்சிகள் இதில் குறைவு. கடந்த பாகம் முடியும்போது பலரும் கலங்கிய கண்களோடு தியேட்டரை விட்டு வெளியேறியதைப் பார்க்க முடிந்தது. ஆனாலும் அந்தக் குறைகளை படம் முழுக்க நிறைந்திருக்கும் நகைச்சுவை வசனங்கள் மறக்கடிக்கின்றன. கடும் வெயிலின் தாக்கத்தின் நடுவே குடும்பத்தோடு நல்ல ஒலி-ஒளி அமைந்த திரையரங்கில் காண வேண்டிய படம் ‘டாய் ஸ்டோரி-4’

SCROLL FOR NEXT