ஹாலிவுட்

சிறந்த நடிகை மெக்டார்மன்ட்டின் ஆஸ்கர் விருது திருட்டு: மது போதையில் எடுத்துச் சென்றவர் சிக்கினார்

ஏபி

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற நடிகை மெக்டார்மன்ட் விருது சில மணிநேரங்களில் திருடுபோனது. அதன்பின் போலீஸாரின் தீவிர தேடுதலுக்குப் பின் அது மீட்கப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் 'தி ஷேப் ஆப் வாட்டர்' திரைப்படத்துக்கு 4 விருதுகள் கிடைத்தன. 'தி டார்கஸ்ட் ஹவர்' திரைப்படத்தில் நடித்த கேரி ஒல்டுமேனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

இதில் 'த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி' எனும் படத்தில் நடித்தமைக்காக நடிகை மெக்டார்மென்ட்டுக்கு (வயது 60) சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருது பெற்றவர்கள், பங்கேற்வர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் இரவு விருந்து நடந்தது. அப்போது, ஆஸ்கர் விருது பெற்றவர்களின் விருதுகள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்தன.

விருந்து முடிந்து மெக்டார்மன்ட் பார்த்தபோது, அவரின் விருதை மட்டும் காணவில்லை. இதைக் கண்டு நடிகை மெக்டாரமன்ட் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். என்னுடைய ஆஸ்கர் விருதை காணவில்லை, காணவில்லை என்று புலம்பினார். இதையடுத்து, லாஸ்ஏஞ்செல்ஸ் நகர போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார், நடத்திய தீவிர விசாரணைக்குப் பின் டெர்ரி பிரையன்ட் (வயது 47) என்பவரை கைது செய்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின் நடந்த விருந்துக்கு டெர்ரி பிரையன்ட்டும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

அப்போது, விருந்தில் அதிகமான மது அருந்தி போதையில் இருந்த, பிரையன்ட், நடிகை மெக்டார்மன்டின் ஆஸ்கர் விருதை கையில் வைத்துக் கொண்டு நடனமாடியுள்ளார்.

நான் ஆஸ்கர் விருது வென்றுவிட்டேன், எனக்கு ஆஸ்கர் விருது கிடைத்து இருக்கிறது என்று கூறிக்கொண்டே பிரையன்ட் பேஸ்புக் லைவ் வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ சற்று நேரத்தில் ஏராளமானோருக்கு பரவியது. மேலும், இதை அங்கிருந்த சில தொலைக்காட்சி கேமிராமேன்களும் பதிவு செய்து இருந்தனர். இதையடுத்து, போலீஸார் டெர்ரி பிரையன்ட்டை கைது செய்து அவரிடம் இருந்து ஆஸ்கர் விருதை மீட்டனர்.

அதன்பின் நடிகை மெக்டார்மன்டின் ஆஸ்கர் விருது மீண்டும் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டவுடன் அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

டெர்ரி பிரையன்ட்டை கைது செய்த போலீஸார் அவரை ரூ.1.50 லட்சம் ஜாமீனில் அளித்தனர். விரைவில் நீதிமன்றம் மூலம் அனுப்பப்படும் சம்மனின் போது ஆஜராக வேண்டும் என எச்சரித்து அனுப்பினர்.

SCROLL FOR NEXT