ஹாலிவுட்

முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜோர்டன் பீலேவுக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது

பிடிஐ

‘கெட் அவுட்’ படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் எனும் பெருமையை படத்தின் இயக்குநரும், திரைக்கதை எழுதியவருமான ஜோர்டன் பீலே பெற்றார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. திரைஉலகில் வழங்கும் மிக உயர்ந்த விருதாக ஆஸ்கார் கருதப்படுகிறது. இதில் சிறந்த திரைக்கதைக்கான விருது ‘கெட் அவுட்’ படத்துக்கு வழங்கப்பட்டது.

இந்த படத்துக்கு திரைக்கதை எழுதிய ஜோர்டன் பீலே இந்த விருதைப் பெற்றார். திரைக்கதைக்கான விருதுக்கு தி ஷேப் ஆப் வாட்டர், த்ரீ பில்போர்ட்ஸ் ஆவுட்சைட் எபிங், மிசோரி, தி பிக் சிக்கான் லேடி பேர்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், கெட் அவுட் படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திரைக்கதைக்கு ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் எனும் பெருமையையும் ஜோர்டன் பீலே பெற்றார்.

இந்த விருது குறித்து பீலோ கூறுகையில், ‘இந்த விருது எனக்கு அறிவிக்கப்பட்டதும் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்து இருந்தது. கெட் அவுட் திரைப்படத்துக்கு நான் திரைக்கதை எழுதும்போது ஏற்ககுறைய 20 முறை நான் நிறுத்தி நிறுத்தி எழுதி இருப்பேன். இந்த திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதுவது சாத்தியமில்லை என்றே நினைத்திருந்தேன். யாரும் இந்த திரைப்படத்தை எடுக்கவும் முடியாது என்றும் இருந்தேன். ஆனால், இந்த திரைப்படத்தை எடுக்க வேண்டும், இதை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இதற்கு திரைக்கதை எழுதினேன். என்னுடைய குரல் இந்த பெருமைமிகு மேடையில் ஒலிக்க காரணமாக இருக்கும் அனைத்து மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன்.

என்னுடைய மனைவி, தாய், என் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தை பார்த்து என்னை உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி’ எனத் தெரிவித்தார்.

ஜோர்டன் பீலே நடிகராக இருந்து, இயக்குநராக மாறியவர். இவர் கெட் அவுட் படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதுக்காகவும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இப்போது திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ளார். ஜோர்டன் பீலேவுக்கு ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் நிக்கோல் கிட்மேன் வழங்கினார்.

கெட் அவுட் திரைப்படத்தின் கதை இதுதான்...

அமெரிக்காவின் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் தனது காதலியின் வீட்டுக்கு கருப்பினத்தைச் சேர்ந்த கதாநாயகன் (ஜோர்டன் பீலே) வருகிறான். அந்த வீட்டிக்கு வந்தபின் அங்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன, இதை மிகவும் சுவரஸ்யத்துடன், த்ரில்லருடன் எப்படி ஹீரோ எதிர்கொள்கிறான் என்பதே படமாகும். இந்த திரைப்படம் மூலம் காமெடி நடிகர் ஜோர்டன் பீலே இயக்குநர் அவதாரம் எடுத்து இருக்கிறார். ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் அமெரிக்காவில் இருக்கும் நிறவெறி அரசியலை பேசி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் பீலே கூறி இருக்கிறார். இந்த திரைப்படத்துக்கு ஆஸ்கார் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரைக்கதைக்கு வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT